சற்று முன்
Home / செய்திகள் / பொய் சொன்ன ஐதேக விற்கு நாங்கள் யார் எனக் காட்டுவோம் – சீற்றம் அடைந்த சுமந்திரன்

பொய் சொன்ன ஐதேக விற்கு நாங்கள் யார் எனக் காட்டுவோம் – சீற்றம் அடைந்த சுமந்திரன்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவை அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம். அந்தக் கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை. சட்டத்துக்கு முரணானவை. அது தொடர்பில் எங்களின் கடுமையான எதிர்வினையை வரும் நாட்களில் நீங்கள் காணலாம்.”

– இவ்வாறு சீற்றத்துடன் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

ஜெனிவாவிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் இலண்டனில் வைத்து ஐ.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டியில் அவர் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:-

“தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மக்கள் மத்தியில் மதிப்பை – ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சில விடயங்களை ஜெனிவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியிருக்கலாம். ஆனால், அதற்காக அவருக்கு வக்காளத்து வாங்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

அவர் கூறிய அத்தகைய கூற்றுக்கள் அனைத்தையும் நான் நிராகரிக்கின்றேன். அவை உண்மைக்குப் புறம்பானவை; சட்டத்துக்கும் புறம்பானவை.

இப்போதுதான் ஐ.தே.க. அப்படி ஒரு கூற்றை முதல் தடவையாக வெளியிடத் தொடங்கியிருக்கின்றது. இது சம்பந்தமாக எங்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்துவரும் சில நாட்களில் நீங்கள் காணலாம்.

எங்கள் முயற்சியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய புதிய அரசமைப்புக்கான ஒரு வரைவு வடிவம் வெளிவந்திருக்கின்றது. அது உண்மை.

ஆனால், இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் அதைத் தொட்டுப்பார்க்க – மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எல்லோருக்கும் பயம். அதை முற்கொண்டு செல்வதற்கு எவருக்கும் அரசியல் துணிச்சல் இல்லாமல் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்த அரசியல் துணிச்சல் கிடையாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கொஞ்சம் அரசியல் துணிவு கூடுதலாக இருந்தது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால், அவரும் இப்போது தலைகீழாக மாறி நிற்கின்ற காரணத்தினாலே அதுவும் பின்னடைவு கண்டிருக்கின்றது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் முயற்சியால் தனியாக அதிகாரப் பரவலாக்கல் விடயத்தையாவது முன்னெடுப்பதற்கான இணக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது. அந்த முயற்சியை நாம் தொடருகின்றோம்” – என்றார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகைக்கு சுமந்திரன் வழங்கிய நேர்காணலில் “நாங்கள் ஐதேகவிற்கு முட்டுக் கொடுப்பது உண்மைதான் ஐதேகவிற்கு முட்டுக்கொடுத்தால்தான் சாதிக்கவேண்டிய பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com