பொன்னாலையில் மாணவர்கள் போராட்டம் !

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10 ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். போராட்டம் நாளையும் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்படி பாடசாலையில் தற்போது தரம் 09 வரையான வகுப்புக்களே நடைபெற்று வருகின்ற நிலையில் இங்கு க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வருடத்தில் (2018) இருந்து தரம் 10 ஐ ஆரம்பித்து அடுத்த வருடம் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை நடத்துமாறு வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு கடந்த 28 ஆம் திகதி தாங்கள் கடிதம் சமர்ப்பித்தனர் எனவும் ஒரு மாதம் தாமதித்து டிசம்பர் 28 ஆம் திகதி, இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார் எனவும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.

பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாடாசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்தே மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர் எனவும் தமது கோரிக்கைக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

இப்பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர். இதனால் இக்கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது என பெற்றோர் தெரிவித்தனர்.

தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த போராட்டம் நாளையும் தொடரும் எனவும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com