சற்று முன்
Home / செய்திகள் / பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது

பேரினவாத கட்சிகளுடன் இணைந்த தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டுள்ளது

உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமா் பொன்னம்பலம் உள்ளூராட்சித் தேர்தலில் தமது வாக்குவங்கியை சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளால் இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அது எங்களுடைய முட்டாள்தனம். அவர்கள் திருந்தப்போவதில்லை அந்தப் பெரும் பின்னடைவிற்குப் பிற்பாடும் அவர்களோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அடிவருடிக் கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் நேற்று (01.05.2018) செவ்வாய்க்கிழமை நல்லூர் கிட்டுபூங்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

“தமிழ்த் தேசயத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு சில முக்கியமான பொறுப்புக்கள் உள்ளன. அந்த முக்கியமான அடிப்படை விடயங்களில் எமது அமைப்பு தீவிரமாக இயங்கிவருகின்றது. மக்களது அன்றாட பிரச்சனைகளை எமது உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஊடகவும் உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஏனயை உறுப்பினர்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து தீர்வுகாணும்வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.

அதேபோல தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய மான விடயங்கள் இருக்கின்றன. எமது அமைப்பின் தலைமைப்பீடம் அந்த முக்கியமான கொள்கை விடயங்களில் மிகவும் தீவிரமாக இயங்கிவருகின்றது. முதலாவது எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு.

அந்த விடயம் தொடர்பாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்ய முடிவெடுத்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்த தமிழ்த் தேசிய நீக்கம் செய்தால் மட்டுமே நாங்கள் கடந்த 70 வருடங்களாக நிராகரித்துவந்த நாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டுசெல்லப்படுவோம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.

அந்தச் செயற்பாடுகள் போர் முடிந்த கையோடே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தமிழ்த் தேசிய வாதத்தைப் பொறுத்தவரை எமக்கு மிக முக்கியமான அடையாளங்கள் உள்ளன. தமிழ்த் தேசிய பரம்பரையில் வளர்ந்துவந்த கட்சிகள். சிங்கக் கொடியை ஏற்றுக்கொண்டதில்லை. இரண்டாவது சிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்களிற்கு எதிரான அடக்குமுறை தினமான பார்க்கின்ற விடயம்.

மூன்றாவது தெற்கை மையப்படுத்தி செயற்படுகின்ற பேரினவாத கட்சிகளை நிராகரிக்கிறது. எமது மண்ணில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது எனச் செயற்படுவது.

இந்த மூன்று விடையங்களும் மிக முக்கியமான விடையங்கள். ஆனால் தமிழ் அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்வதாக இருந்தால் மக்கள் இந்த மூன்று விடயங்களையும் மறந்துவிட வேண்டும். அந்தவகையில்தான் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டதாகக் கூறிவந்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்றது.

இதே மேதினம் போன்று 2012 மேதினத்தில் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினக்கூட்டம் நடத்தவேண்டும் எனக் கேட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்ட மிகக் கேவலமான செயல் அரங்கேறியது. அந்தக் கொண்டாட்டத்தில் தமிழ்த் தேசியம் நிலைநாட்டப்பட்ட பின் அக் கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் வரலாற்றில் முதல் தடவையாக சிங்கக் கொடி ஏந்தினார்.

இது எல்லாம் அவர் வயது போன தன்மையினால் செய்த செயல்கள் அல்ல. தனது ஞாபகசக்தி குறைவினால் செய்த செயலும் அல்ல. அவ்வாறு பார்ப்பது எம்முடைய பலவீனம். இது தழட்டமிட்ட வகையில் செய்த செயல்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்யவேண்டுமாக இருந்தால் இவ்வளவு காலமுமாகப் பார்க்கப்பட்ட சம்பவங்கள் எமது மனங்களில் இருந்து அகற்றப்படவேண்டும். அவை பிழையானவையாக நாங்கள் கருதாமல் நாங்கள் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவர வேண்டும். அதற்காக முன்னெடுக்கப்பட்ட விடயங்களே இவை.
இவற்றைத்தான் நாங்கள் எமது மக்களிடம் சுட்டிக்காட்டி வருகின்றோம்” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com