பெயர் வைப்பதற்கு அக்கப்போர் – வட மாகாணசபை அமர்வு ஓர் அலசல்

northern_provincial_council-720x480கடந்த மாகாணசபை அமர்வின்போது ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து கடும் எதிர்ப்பலைகளைச் சந்தித்திருந்த நிலையில் வடமாகாண சபையின் 53 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , முதலமைச்சர் நிதி நியதி சட்டம் சபையின் அங்கீகாரத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த நியதி சட்ட விவாதத்தின் போது நியதிச்சட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என பெரும் அக்கப்போரினை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடங்கிவைத்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என சேருங்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம்

குறித்த நியதி சட்ட விவாதத்தின் போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் எனும் சொல்லுடன் , போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எனும் சொல்லும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

மத்திய அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு உள்ளது. அதேபோன்று நாமும் கைவிட முடியாது. தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது இன்றும் வழங்கி வருகின்றது.

அதேபோன்று சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. வீடிழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கு கின்றது ஆனால் இங்கு போரினால் பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் 30 வருட காலமாக வீடு இழந்து வீதியில்நிற்கின்றது.

முற்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் வீடுகள் கட்டடங்களுக்கு பணம் கொடுப்பதில்லை எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனை இணைந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.

காலாகாலத்திற்கு இருக்கிற சட்டம் நல்ல பேரா வையுங்கோ – பரம்சோதி 

இந்த நியதி சட்டம் என்பது காலத்திற்கும் இருக்க போவது எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனை இணைத்துக் கொள்ள தேவையில்லை. என வடமாகாண சபை உறுப்பினர் பரம்சோதி தெரிவித்தார்.

இன்னமும் 20 வருடங்களுக்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என எவரும் இருக்க போவதில்லை.

அதேவேளை வடக்கில் பிறந்த ஒருவர் போரினால் வடக்கை விட்டு வெளியேறி கொழும்பிலே வசித்து விட்டு போர் முடிவடைந்த பின்னர் மீண்டும் வடக்குக்கு திரும்பி தானும் போரினால் பாதிக்கப்பட்டவன் என கூறி உதவி கேட்டால் என செய்ய முடியும். எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனை இணைத்துக் கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

யுத்தம் இல்லாத பெயர் வேண்டும் – சயந்தன்

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என எதனையும் தனித்து அடையாளம் காட்ட முடியாது. போரினால் இலங்கை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது.

மாத்தறையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் காயமேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் வடக்கிலே மணலாறு பகுதியில் குடியேறி விட்டு தானும் போரினால் பாதிக்கப்பட்டவன் என கூறி உதவி கேட்டால் என்ன செய்வது

எனவே போரினால் பாதிக்கப்பட்ட என்ற சொல்லுக்கு பதிலாக வேறு பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட என்ற சொல்லை பாவிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய எண்டுதான் காசு வருகிறது – முதலமைச்சர்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியே புலம் பெயர் தேசத்தில் உள்ள பலர் உதவ முன் வருகின்றார்கள். எனவே அந்த சொல்லினை சேர்ப்பதில் பிரச்சனை இல்லை. 20 வருடங்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று எவரும் இல்லாது போய் விடின் அப்போது அதில் அப்போது உள்ளவர்கள் திருத்தத்தை கொண்டு வரட்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கலவரம் என்ற சொல்லுக்கும் விவாதம்.

அதனை தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குள் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை உள்வாங்க மாட்டார்கள். எனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனையும் இணைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

அதற்கு வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆட்சேபனை தெரிவித்தார். இனிவரும் காலத்தில் கலவரங்கள் ஏற்பட கூடாது என்பதற்காகவே நாம் போராடுகின்றோம் எனவே கலவரம் என்பதனை வேறு அனர்த்தம் என்பதற்குள் உள்ளடக்கலாம். அனர்த்தம் என்பதற்குள் கலவரம் , இயற்கை அனர்த்தம் , பேரழிவுகள் எல்லாம் உள்ளடங்கும் என கூறினார்.

அதனை தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நியதி சட்டம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று திருத்தங்களுடன் சபையில் எதிர்ப்பின்றி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com