சற்று முன்
Home / செய்திகள் / பெயர் மாற்றி எழுதிய அழைப்பாணையுடன் கல்வி அமைச்சரைத் தேடி அலைந்த புலனாய்வுப் பிரிவினர் – 4 ஆம் மாடிக்கு அழைப்பு

பெயர் மாற்றி எழுதிய அழைப்பாணையுடன் கல்வி அமைச்சரைத் தேடி அலைந்த புலனாய்வுப் பிரிவினர் – 4 ஆம் மாடிக்கு அழைப்பு

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.பரமேஸ்வரன் என்ற பெயரிலான அழைப்புத் துண்டு ஒன்றை கொண்டு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் நாள் முழுக்க தேடி அலைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவின் 4ம் மாடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சரை விசாரணை ஒன்றுக்கு சமூகமளிக்க அழைப்புவிடுக்கவே அவரை தேடி அலைந்துள்ளனர்.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்துக்கு இன்றைய தினமான செவ்வாய்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இருவர் வருகை தந்துள்ளனர். அவர்கள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு வருகை தர அழைக்கும் அழைப்பாணையுடன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என எவருமில்லையென தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை தொடர்புகொண்டு விடயத்தைத் தெரியப்படுத்தியபின் அவரைச் சந்திக்க அவர்களிற்கு அனுமதித்துள்ளனர்.

எவரது ஒப்பமும் அற்ற வெறுமனே கைகளால் எழுதப்பட்டு யாரால் எழுதப்பட்டது அல்லது யாருக்கு எழுதப்பட்டதென்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோபிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றை கையளித்த அவர்கள் விசாரணையொன்றிற்காக கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு வருகை தர அழைப்புவிடுத்திருந்தனர்.

எனினும் மொட்டைக்கடிதப்பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அவர், எதிர்வரும் ஜீன் 5ம் திகதி முதல் 14ம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சரிடமே மொட்டைக்கடித அழைப்பாணையுடன் வருகை தரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சாதாரண பொதுமக்களுடன் எவ்வாறு கையாளுவர் என்பது குறித்து தனக்கு சந்தேகமிருப்பதாக கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் இப்பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக கடிதங்களை கையாளது மொட்டைக்கடித பாணியில் அனுப்பிவைப்பதும் எதற்காகவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் மாகாண சபைக் கொடியை அரைக்கம்பத்தில பறக்க விடுமாறு அழைப்பு விடுத்த குற்றச்சாட்டில் வடக்கு கல்வி அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படும் என அரச உயர்மட்டம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com