பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் தொடர்பில் சட்ட திருத்தம் செய்ய நடவடிக்கை

பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கேட்டுக்ெகாண்டார்.

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கியதன் மூலம் தேர்தல் பெறுபேறுகள் வெளியானது முதல் பாரிய குழப்பநிலை உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தைப் பின்பற்றினால் வெற்றிப்பெற்ற ஆண் வேட்பாளர்களுக்கு அநீதி விளைவிக்கப்படும்.அத்துடன் பல உள்ளூராட்சி சபைகளை இயக்க முடியாத நிலை உருவாகும்.

எனவே விரைவில் இதற்கான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதே இதற்குரிய சரியான தீர்வாக அமையுமென்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவிக்ைகயிலேயே அதன் ஆணையாளர் தேசப்பிரிய இவ்வாறு கூறினார். ஒவ்வொரு உள்ளூராட்சி சபை செயற்படுவதற்கும் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதனை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டுமென சட்டம் வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும் வெற்றிப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டிலும் குறைவாக இருந்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சபையில் பெண்களின் நியமனத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் கட்சி அல்லது குழு தனக்குரிய ஆசனத்தையும் விட வட்டாரத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால் பட்டியலில் இருந்து எவரையும் நியமிக்க முடியாது என்றும் அதே சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், பெண்களின் 25 சதவீதத்தை உறுதி செய்வதற்காக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தால் தற்போது பல உள்ளூராட்சி சபைகளை இயக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். “அநேகமான உள்ளூராட்சி சபைகளில் பெண் பிரதிநிதிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக காரை தீவின் முடிவுகளின்படி இரண்டு பெண் பிரதிநிதிகள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிரதிநிதியை நியமிக்க முடியாத நிலை அங்கு உருவாகியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“அதேபோன்று வட்டாரமொன்றில் கூடுதல் வாக்குகள் பெறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் 25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்வது மிக சிரமமான விடயமாகும். இதன் மூலம் வெற்றிப் பெற்ற ஏனைய ஆண் பிரதிநிதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார். இதனால் முறைப்படி சட்டத்தைப் பின்பற்றுவதா? அல்லது இல்லையா? என்ற குழப்பநிலையில் தேர்தல் ஆணைக்குழு உள்ளது. எனினும் பலர் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துக்கான சட்டத்தை பின்பற்றுமாறே எமக்கு கூறுகின்றனர்.

எனினும் அது நியாயமற்றது ஆகையால் அதற்குரிய சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதே எமது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். “தேர்தல் முடிவடைந்ததும் இவ்வாறான பிரச்சினை உருவாகும் என்பதை தேர்தல் ஆணைக்குழு முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தது. இச்சட்டம் இயற்றும்போதே நாம் இதுபற்றி அவர்களுக்கு தெரிவித்தோம்.

இதற்கு அவர்கள் நாம் அநாவசியமாக பாரதூரமாக சிந்திப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது விடயம் பாரதூரமடைந்து விட்டது” என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி சபைகளிலுள்ள பெண் பிரதிநிதிகளின் முழுமையான விவரம் அடுத்த வாரமளவிலேயே வெளியிடப்படுமென்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com