பூமித்தாயில் மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்வதன் விளைவே இயற்கைப் பேரழிவுகள்! – இயற்கைப் பேரிடர் தணிப்புத் தின நிகழ்ச்சியில் ஐங்கரநேசன்


பூமி எமது தாய். எமது மொழியில் மட்டும் அல்ல் உலகில் பேசப்படுகின்ற எல்லா மொழிகளிலுமே பூமித்தாய் என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் பிள்ளைகள் போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்ப்பதற்கு ஆசைப்படுகின்ற நாங்கள் அளவுகணக்கில்லாமல் வளங்களைச் சுரண்டிப் பூமியில் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான் இயற்கைப்பேரழிவுகள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.2017) நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இயற்கைப்பேரிடர்களை முற்றாகத் தவிர்க்க இயலாமற்; போனாலும், அவற்றின் பாதிப்புகளைத் தணிவிக்க இயலும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு அமர்வாக இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும்போது,
பூமிக்கு உயிர் உண்டு. பாடங்களை நாங்கள் இரசாயனவியல், பௌதீகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் படிப்பதால் பூமியின் முழுப்பரிமாணங்களையும் எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் எமது உடலின் வெப்பநிலையைச் சராசரியாக 37பாகை சதம அளவையில் பேணி வருகிறோம். பூமியும் தன் வெப்பநிலையை 16 பாகை சதம அளவையில் பேணி வருகிறது நாங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவை இலீற்றருக்கு 1கிராம் என்ற அளவில் மாறாமற் பேணி வருகிறோம். அதேபோன்றுதான், பூமியும் வளியில் உள்ள ஒட்சிசனின் செறிவை 21வீதம் என்ற அளவில் மாறமற் பேணி வருகிறது. எங்களின் உடலில் ஒரு சீர்த்திடநிலை காணப்படுவதைப்போன்றே, பூமியிலும் அது பேணப்பட்டு வருகிறது. இது குழப்பப்டுகின்றபோதே அழிவுகள் ஏற்படுகின்றன.
எங்களது உடலில் கிருமிகள் தொற்றுகின்றபோது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் விழிப்புற்று கிருமிகளுடன் போரிட ஆரம்பிக்கிறது நோய் எதிர்ப்புச்சக்தி பலமாக இருந்தால் கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். கிருமிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்தால் நாங்கள் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறக்க நேரிடுகிறது. இதேபோன்றதொரு யுத்தம்தான் பூமித்தாய்க்கும் மனிதக்கிருமிகளுக்கும் இடையில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் இன்றைய சனத்தொகை 750 கோடி. இவ்வளவு பேரும் பூமித்தாயின் வளங்களைச் சூறையாடி ஒட்டுண்ணி வாழ்கையையே நடாத்தி வருகிறோம். பூமியின் நலனில் நாங்கள் அக்கறை கொள்ளாததால், தன் நலனில் தானே அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் பூமிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் புயல், மழை, வெள்ளம், கடும் வரட்சி, கடற்கோள் என்று இயற்கைப் பேரிடர்களை ஏற்படுத்திப் பூமி எங்களை அழித்து வருகிறது.
பூமிக்கும் எங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த யுத்தத்தில் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்;டாயத்தில் இருக்கிறோம். எங்களது உணவுக்குழாயில் இ.கோலி என்ற பக்ரீறியாக்கள் கோடிக்கணக்கில் குடியிருக்கின்றன. இவை எங்களுக்கு விற்றமின்களைத் தொகுத்துத்தர நாங்கள் இவற்றுக்கு உணவையும் பாதுகாப்பான வாழிடத்தையும் வழங்கி வருகிறோம். நாங்களும் இ.கோலி பக்ரீறியாக்களும் ஒன்றுக்கொன்று நன்மை பயப்பனவாக வாழ்வதால் ஒன்றையொன்று அழிப்பதற்கு முற்படுவதில்லை. அதேபோன்று, நாங்களும் பூமித்தாய்க்கு நன்மைகள் செய்து, அவளிடம் இருந்தும் நன்மைகள் பெற்று ஒன்றியவாழிகளாக வாழ்வதால் மட்டுமே இயற்கையின் சீற்றங்களைத் தணிவிக்க இயலும். மாறாக, தொடர்ந்தும் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து பூமியின் வளங்களை உறிஞ்ச முற்படுவோமானால் பூமியின் எதிரத்; தாக்குதலில் நாங்கள் அழிவது தவிர்க்கமுடியாமற் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com