சற்று முன்
Home / செய்திகள் / புலிகளை அழிப்பதில் தமிழக பிரதான அரசியற் கட்சிகள் அதிக ஆதரவளித்தன – சிவ்சங்கர் மேனன்

புலிகளை அழிப்பதில் தமிழக பிரதான அரசியற் கட்சிகள் அதிக ஆதரவளித்தன – சிவ்சங்கர் மேனன்


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் புலிகளை அழிப்பதற்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளும் அதிகளவில் ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சிவசங்கர் மேனன் எழுதிய நூலொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு எதிராக இந்தியா எடுத்திருந்த நிலைப்பாட்டுக்கு தனிப்பட்டமுறையில் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், புதுடெல்லிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியில் தோன்றியிருந்திருந்தாலும், இரண்டு தரப்புகளுமே ஒருமித்த கருத்திலேயே இருந்தன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுமே இந்த நிலையில் தான் இருந்தன.

அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியினதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனினதும் கடு மையான உழைப்பின் விளைவே இது. நான் தனியாக சென்னையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்த போது, இதனைக் கண்டு கொண்டேன்.இந்தியாவின் கொள்கைத் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. வெற்றிபெறும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவில் தங்கியிருக்கமாட்டார் என்பதையும், இந்தியாவுக்கு குறைந்தளவுக்கே பதிலளிப்பார் என்பதையும் புதுடெல்லி நன்கு அறிந்திருந்தது.

இராணுவம் உள்ளிட்ட அதிகாரத்தில் மாத்திரம் ராஜபக்ச உறுதியான பிடியைக் கொண்டிருக்கவில்லை. சீனா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவினது பின்புல ஆதரவும் அவருக்கு இருந்தது.புலனாய்வு மற்றும் இராணுவப் பயிற்சிகள் விடயத்தில் ராஜபக்சவுக்கு உதவ அமெரிக்கா விரும்பியது. ஆனால், மனித உரிமைகள் விடயத்தில் கரிசனைகளை எழுப்பியது.

இலங்கையில் உள்ள எமது கடல்சார் மற்றும் ஏனைய நலன்களை தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். புவிசார் அரசியல் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அண்டைநாடு ஏனைய சக்தி வாய்ந்த நாடுகளின் கையில் சிக்கியிருக்கும்.

வெற்றியின் விளிம்பில் இருந்த போது மகிந்த ராஜபக்ச மேற்குலகின் போர் நிறுத்த மற்றும், விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்களுக்கு இணங்கத் தயாராக இருக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் இழப்பைக் குறைப்பதற்கு அப்போது அதுவே ஒரே வழியாக இருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் 200 பில்லியன் டொலர் தொகையை முழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இந்தக் கணக்கில் சந்தர்ப்பச் செலவு என்று பெயரில் செலவிடப்பட்ட தொகை சேர்க்கப்படவில்லை. ஒருகாலத்தில் போர் வெடிக்கும் முன்பு அதிவேக மான வளர்ச்சியைக் கண்ட தென் கிழக்கு ஆசியாவின் அதி சிறந்த திறந்த பொருளாதார நிலையமாக இலங்கை இருந்து வந்தது.

1983- 2009 இடைப்பட்ட காலத்தில் 80,000 தொடக்கம் 100,000 வரையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.இதில் பொதுமக்கள் தொகை 30,000 தொடக்கம் 50,000 வரையில் இருக்கலாமென்றும், 27,693 புலிப் போராளிகளும் 23,790 இராணுவத்தினரும் இந்திய சமாதானப் படையினர் 1,155 பேரும் இறந்துள்ளதாகவும் இவர் தன் நூலில் எழுதியுள்ளார்.

போரின் இறுதிக் கட்டம் 300,000 உள்நாட்டு அகதிகளை உருவாக்கியதாகவும் வட கிழக்கு பிராந்தியங்களில் 1.6 மில்லியன் கண்ணி வெடிகளை இந்த யுத்தம் விட்டுச் சென்றதாகவும் இவர் கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com