புத்தாண்டு எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆண்டாக இருக்கும் – இலங்கை எதிர்க்கட்சித்தலைவர்

புத்தாண்டு 2017 மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.

நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம் எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றிணைந்துசௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் – காலிமுகதிடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நத்தார் மரத்தை ஆறாம் நாளாக மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து உரையாற்றிய நிகழ்விலேயே எதிர்க் கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்கான சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இக்குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மேலும் இங்கு தெரிவித்தார்.

நத்தார் காலம் மிகவும் மகிழ்ச்சியான காலமாகும். கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள் என கருதாது இலங்கையர்கள் அனைவரும் நத்தாரை கொண்டாடினார்கள். அனைவரும் ஒருநோக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்நத்தார் மரத்தை நிர்மாணித்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். நாம் இந்த வெற்றியை பாராட்டுகின்றோம்.

இலங்கையர்கள் அனைத்து மத கொண்டாட்டங்களையும் பொதுவாக கொண்டாடுவார்கள். வெசாக் கொண்டாட்டம் அனைத்து திருநாள்களையும் இலங்கையர்கள் கொண்டாடுகின்றார்கள். இச்செயற்பாட்டின் மூலம் எம் மக்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமை வெளிப்படுகின்றது. எங்களுடைய சமய கலாச்சார மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டியவாறு ஒரு இனமாக வாழ்வதற்கான தேவை இதன் மூலம் வெளிப்படுகின்றதென்றும் எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பர்ண்டோ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹாவுமான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நத்தார் மரம் நாளை வரையில் மக்கள் பார்வையிட முடியும்.

ஜனவரி மாதம் முதலாம் நாள் இந்நத்தார் மரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com