புதிய ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான அறிமுக கருத்தரங்கம் – முதலமைச்சர் உரை

2000 புதிய ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான அறிமுக கருத்தரங்கம்
யாழ் மாவட்ட செயலக மண்டபத்தில்  23.03.2017  அன்று நடைபெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை,
கௌரவ அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்களே, கௌரவ இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அவர்களே, இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, வடமாகாண ஆளுநர் அவர்களே, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவி திருமதி இந்திரா மல்வத்த அவர்களே, யாழ் அரசாங்க அதிபர் அவர்களே, வடமாகாண பிரதம செயலாளர் அவர்களே, இன்றைய கருத்தரங்கத்தில் கருத்துரையாற்ற வந்திருக்கும் அதிதிகளே, சகோதர சகோதரிகளே,
அரசாங்கத்தின் 2000 ஏற்றுமதியாளர்கனை ஒருங்கிணைக்கும் தேசிய நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ள இந்த முதற் கருத்தரங்கத்தில் என்னைப் பேச அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியறியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று பல பெயர்பெற்ற வளவாளர்கள் இந்த கருத்தரங்கத்தில் பங்கு பற்றுகின்றார்கள். ஒரு சிறிய கண்காட்சி எம்முடைய ஏற்றுமதிப் பொருட்கள் சம்பந்தமாக நடாத்தப்படவிருக்கின்றது என அறிகின்றேன். வடமாகாணத்தில் தயாரிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான பொருட்களை வெளிக்கொண்டு வந்து அவற்றை எவ்வாறு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு விடலாம் என்பது சம்பந்தமாகவும் அதிலுள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகவும் ஆராய இருக்கின்றோம். இதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை எம்மோடு இணைந்து பல கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவிருப்பதாக அறிகின்றேன்.
Entrepreneur என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தமாக “தொழில் முயற்சியாளர்” என்று தமிழில் விவரிக்கலாம். தானாகவே முன்வந்து ஒரு தொழிலை முன்நடத்தி அதன் பொருட்டு நிதி ரீதியான இடர்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகங்கொடுத்து அதில் இலாபம் பெற ஈடுபடுவதே ஒரு தொழில் முயற்சியாளரின் பங்காகும். நிதி ரீதியான இடர்களுக்கு முகங்கொடுத்து ஒரு தொழிலில் ஈடுபட்டு முன்னேறுவதே தொழில் முயற்சியாளர்களின் உள்ளார்ந்த தன்மையாகும்.
இன்றைய கால கட்டத்தில் பல துறைகளிலும் தொழில் முயற்சியாளர்கள் தமது கவனத்தைச் செலுத்தி எமது பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வெளிநாட்டுச் செலாவணியை பெற முயற்சிப்பது நாட்டுக்கும் நல்லது, எமது மாகாணத்திற்கும் நல்லது, குறித்த முயற்சியாளரின் வீட்டிற்கும் நல்லது. அதற்கான புதிய கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். அதன் காரணத்தினால்த்தான், அமைச்சரும் அமைச்சரின் அலுவலர்களும் இவ்வாறானதொரு ஊக்குவிப்பு செயற்பாட்டில் ஈடுபடவிருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் இதற்கான முதலாவது கூட்டத்தை நடாத்தவிருப்பதாகவும் அறிந்தபோது அதற்கான எனது ஒப்புதலை உடனே வழங்கினேன்.
“திரைகடல் ஓடியும் திரவியந் தேடு” என்ற முதுமொழி தமிழ் மக்களின் வாழ்க்கை அகராதியில் பலநூறு ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறான ஒரு மனோநிலைதான் கங்கை கொண்ட சோழனை தென் கிழக்கு நோக்கிச் சென்று பல நாடுகளை வெற்றிகொள்ளச் செய்தது. அதனூடாக வணிகத்தையும் வாணிபத்தையும் வளர்க்கக் கூடியதாகவிருந்தது. சென்ற நூற்றாண்டில் எமது மக்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தார்கள். பின்னர் இந்நாட்டில் ஏற்பட்ட கலவரங்களின் நிமித்தம் வெளியேறிய மக்கள் இன்று பல நாடுகளுக்குச் சென்று பல வழிகளில் முன்னேற்றங் கண்டுள்ளார்கள். ஆகவே தொழில் முயற்சியாளர்களாக எம்மை மாற்றிக் கொள்வது எமக்கு புதியதல்ல. எனினும் எமது சூழலுக்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக் கொண்டு எமது பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய நாங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கான புதியதொரு கலாசாரம் எங்களிடையே வளர வேண்டும். எமக்கான அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற ஆவன செய்துகொண்டு அமைச்சர் மலிக் போன்றோரின் அனுசரணையுடன் தொழில் முன்னேற்றங்காண விழைவது பிழையன்று. அவ்வாறு செய்யும் போது நாம் எமது சமூக நலன்களையும் கலாசார விழுமியங்களையும் கருத்துக்கெடுத்து செயற்பட வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com