புதிய அரசியலமைப்பும் எம்மைப் புறக்கணித்தால் தனி அரசமைக்க சர்வதேசம் உதவவேண்டும் – பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்

புதிய அரசியலமைப்பிலும் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டால், தனித் தமிழீழத்தை பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் ஆவண செய்யவேண்டுமென யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் தொடர்பான கருத்துப்பெறும் குழுவிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கமும் தமிழர்களுடைய உரிமைகளை தர மறுத்தால், சர்வதேசம் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் தமிழ் மக்களுக்கு என்றுமே உரிமைகளை வழங்க மாட்டார்கள் என்பதனை, இந்த முறையும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலும் எனவும் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை மிக நீண்ட காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்றது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட எமது தேசம் இன்றும் சிங்களவர்களுக்கு அடிமையானதாகவே இருந்து வருகின்றது.  எமக்கான உரிமைகள் தருவதாக காலம் காலமாக ஆட்சியாளர்களால் கூறப்பட்டு தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்தோம்.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் தருவதாக கூறி செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களுமே ஒப்பந்தம் செய்தவர்களாலேயே கிழித்தெறியப்பட்டன. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம். இன்றும் எதிர்கட்சியில் உள்ள எமது அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டு கொண்டுள்ளதனை நாங்கள் பார்க்கின்றோம். எங்கள் தலைவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

நாட்டில் இதுவரை கொண்டுவரப்பட அரசியலமைப்பு முறைகளில் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படாமலே இருந்து வந்துள்ளது. தற்போது நாட்டில் புதிய அரசு ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரவுள்ளதாக கூறி அதற்கான கருத்துக்களையும் எங்களிடம் கேட்டு வந்துள்ளனர்.
இந்த அரசியல் அமைப்பில் நாங்கள் காலம் காலமாக வலியுறுத்தி வரும் சமஸ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைவு போன்றவற்றையே இப்போதும் உங்களிடம் வலியுறுத்தியுள்ளோம். எமது கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது எமக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்.
கடந்த கால அரசுகள் மேற்கொண்ட ஏமாற்று நடவடிக்கைகள் போன்று இம்முறையும் இந்த அரசும் எம்மிடம் கருத்துக்களை பெற்று விட்டு எம்மை ஏமாற்றும் செயலில் இறங்குமாயின், எமது விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய சர்வதேச நாடுகள் எமக்கான தனி நாடான தமிழீழத்தை பெற்று தர வேண்டும்.

மாறாக சர்வதேசமும் இலங்கை அரசும் எம்மை ஏமாற்றினால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எமது தமிழ் இளைஞர்கள் தாமாக விரும்பி ஆயுதம் ஏந்தி போராடவில்லை. எமது மக்கள் அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலிலேயே போராடினார்கள்.
ஆகையால் நாங்கள் எமது உரிமைகளுக்காகவே ஆயுதம் ஏந்தினோம். எமது உரிமைகள் மறுக்கப்படா விட்டால் ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றிருக்காது. இந்த இலகுவான எடுகோளை சர்வதேசமும், தென்னிலங்கை அரசும் தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தவிர்க்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
                                         -4-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com