புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு ‘எலிய’ அமைப்பு ஆதரவளிக்காது!

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு ‘எலிய’ அமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது என இலங்கையின்
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (6) ‘எலிய’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘பிரிவினைவாதிகள் தீவிரவாதத்தால் அடைய முடியாததை புதிய அரசியலமைப்பு வழங்கும். இதனை நாம் தோற்கடிக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளின் அனுதாபிகளையும், புலி ஆதரவு புலம் பெயர் தமிழர்களையும், ஒரு தொகுதி வெளிநாட்டு சக்திகளையும் திருப்திப் படுத்தவே இந்தப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.

அத்துடன், போருக்குப் பிந்திய இலங்கையை  இரண்டாகப் பிரிக்கவே ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது. பிரிவினைவாத ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை மக்கள் எதிர்க்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எலிய அமைப்பு அனுமதியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரிகளான தாமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜெயதிலக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com