புதிய அரசாங்கத்தை அமைக்க ரணில், மைத்திரி தனித்தனியே முயற்சி !!

ரணில் – மைத்திரி கூட்டரசு மகிந்த ராஜபக்சவின் எழுச்சியினாலும் பிணை முறிவிவகார சிக்கலினாலும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனியாக சிறுபான்மை அரசொன்றை நிறுவும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமரை நியமித்தால் கூட்டரசாங்கம் தொடர்ந்து நீடிக்க ஆதரவளிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்திரந்தனர். இதனை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்திருந்ததோடு தனியாக ஆட்சியமைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய கட்சிகளை இணைத்து அரசாங்கத்தை அமைக்க முனைப்புக்காட்டிவருவதாக தெரியவந்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணியுடன் உதவியுடனேயே, இவ்வரசாங்கம் ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அமைச்சுப் பதவிகள் எவற்றையும் ஏற்றுக்கொள்ளாமல், சு.கவின் சிறுபான்மை அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணி, உத்தியோகபூர்வமற்ற ரீதியில் சம்மதித்துள்ளது என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றது. கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியின் 52 உறுப்பினர்கள், ஐ.தே.க, அதன் தோழமைக் கட்சிகளின் 26 உறுப்பினர்களின் துணைகொண்டு, இவ்வரசாங்கம் அமைக்கப்படுமெனத் தெரிய வருகிறது.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, 4 பேரின் பெயர்கள் ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com