புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பதினோராவது சந்தேக நபரின் தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பதினோராவது சந்தேக நபரின் தாயார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்.மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தில் நேற்று புதன் கிழமை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டில் தனது மகனுக்கும் மாணவி கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது மகனை குற்றத்தடுப்பு பொலிசார் வேண்டும் என்றே வழக்கில் சிக்க வைத்து, தற்போது தனது மகனை அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தி வருகின்றார்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
மாணவி கொலை வழக்கு தொடர்பில் கடந்த 3ம் திகதி பதினோராவது சந்தேக நபராக உதயசூரியன்  சுரேஸ்கரன் என்பவரை  குற்ற தடுப்பு புலனாய்வு பொலிஸாரால் கைது செய்து இருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஏற்கனவே கைது செய்யப்பட்ட பத்து சந்தேக நபர்களுடன் சேர்த்து மன்றில் ஆஜர்ப்படுத்தாமல், குற்ற தடுப்பு புலனாய்வுப் பொலிஸார் வேறு தவணையில் ஆஜர்படுத்தி  வந்தனர்.
அந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (21) 11 ஆவது சந்தேகநபரை குற்ற தடுப்பு புலனாய்வு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 
இதன்போது, நீதிவான் ஏம்.எம்.எம்.றியாழ் சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
ஏனைய 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அதேவேளை குறித்த பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com