பிரிவில் முடிந்ததா புருஷன் பொண்டாட்டி சண்டை – தவராசாவை பதவி நீக்க கோரிக்கை

vakeesam-braking-newsஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தரும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான சின்னத்துரை தவராசாவிற்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் ஏற்பட்டுவந்த முரண்பாடு உச்சமடைந்த நிலையில் தவராசாவை வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்  பதவியிலிருந்து நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்குமிடையிலான முரண்பாடு தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் கடந்த திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது அதற்குப் பதிலளித்திருந்த அவர் புருஷன் பொண்டாட்டி என்றால் ஆயிரம் சண்டைகள் இருக்கும் என பதிலளித்திருந்தார்.

கடந்த காலத்தில் தமது கட்சியை சேர்ந்த மு.சந்திரகுமார் மற்றும் சி.தவராசா ஆகியோர் வெளிநாடு சென்று இருந்தனர் எனவும் பின்னர் மீண்டும் வந்து கட்சியில் இணைந்தாகவும் குறிப்பிட்ட அவர் அவர்கள் இருவரும் வெளிநாடு சென்ற போது கட்சி உடைந்து போகவில்லை. அதேபோன்று அவர்கள் மீண்டும் கட்சியில் வந்து இணைந்த போது ஆஹா ஓஹோ என கட்சி வளரவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு புகையிரத பயணத்தில் பலர் ஏறுவார்கள் இறங்குவார்கள். அது தொடர்பில் நாம் எதுவும் சொல்ல முடியாது. எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே தவராசாவை வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்  பதவியிலிருந்து நீக்கம் செய்து, அப் பதவியை மற்றொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை. தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com