பிரித்தானியா செல்கிறார் வடக்கு முதல்வர் – கிங்ஸ்டன் நகருடன் இரட்டை நகர் ஒப்பந்தத்தில் இணைகிறது யாழ்ப்பாணம்

kingstonபிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் நாள் கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதோடு பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில்  கையெழுத்திடவுள்ளதாக கிங்ஸ்டன் நகரசபை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இரண்டை நகர உடன்பாட்டின் மூலம் யாழ் நகருக்கும் கிங்ஸ்டன் நகருக்குமிடையில் கல்வி, சுகாதராம் உள்ளிட்ட அறிவுசார் விடையங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் இதன் மூலம் யாழ்ப்பாணத் தமிழர்களும் கிங்ரனில் வசிக்கும் சுமார் 12 ஆயிரம் தமிழர்களும் பயனடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தில், சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதுடன், தமிழ் அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் இருக்கின்றது.

இவ் விஜயத்தின்போது முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் கிங்ஸ்டன் மருத்துவமனை, கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் சில முக்கிய வணிக நிறுவனங்களிற்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிங்ஸ்டன் நகர கவுன்சிலர் கெவின் டேவிட் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நகரிலிருந்து வருகைதரும் நீதியரசர் விக்னேஸ்வரன் கிங்ஸ்டன் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஆற்றப்போகும் உரையினைக் கேட்க ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டள்ளார்.

கிங்ஸ்டன் நகரம் ஏற்கனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்-கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இது தொடர்பாக வடக்கு மாகாண சபை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com