பிரமிட் மோசடி வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் – யாழ் குற்றத் தடுப்பு பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் பிரமிட் மோசடி வியாபாரம் தொடர்பில் வாகீசம் இணையம் புலனாய்வு செய்து தொடர்ச்சியாக கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில் ” பிரமிட் மோசடியில் இணைந்து கொள்பவர்கள், வருகின்ற நாட்களில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்” என்று, யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“பிரமிட் வியாபாரத்தின் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கோடு, இலங்கை மத்திய வங்கியினால் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“இதனைத்தொடர்ந்து, குறித்த வியாபாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார், நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

“இவ்வியாபாரமானது ஒரு பிரமிட் வடிவாக இருப்பதுடன், ஒரு தனி நபருக்கு கீழ் மேலதிக நபர்களை இணைத்துவிடுவதன் மூலம் இலாபம் உழைக்கும் முறையாகும். இதில் மருந்து, தங்க நாணயங்கள், மரத் தளவாடங்கள், மின்சாரப்பொருட்கள் போன்றவற்றை வாங்க வேண்டும். ஒரு தொகைப்பணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது இணையத்தளம் மூலமாக வைப்பிலிட வேண்டும்.

“இத்திட்டத்தில், இணைவதற்கு மற்றவர்களைச் சேர்த்தல் வேண்டும் என மக்களுக்குப் பணிக்கப்படுகின்றது. இவை, வங்கித்தொழில் சட்டத்தின் 83சி பிரிவின் கீழ் சட்டவிரோதமாகும். இதில் மக்கள், வஞ்சகமான முறையில் கவரப்படுகின்றனர்.

“அநேகமாக புதிய பங்கேற்பாளர்கள் எதிர்பார்த்த வருமானத்தை இழப்பதோடு கூடுதலாக விலை மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களையும் வைத்திருக்க வேண்டியிருக்கும், எனினும் 1988ஆம் ஆண்டு 24ஆம் இலக்க அந்நிய செலாவாணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 2006ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ், சில கொடுப்பனவுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தண்டிக்கப்படகூடிய குற்றங்கள் ஆகும்.

“இச்செயல்கள் மூலம் ஏதாவது ஒரு நபர் இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட திட்டத்தில் பங்குபற்றிய குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு 3 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய்க்கு குறையாத அபராதம் என்பன நீதிமன்றத்தால் விதிக்கப்படும்.

“மேலும் மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது வேண்டுமென்றோ அல்லது தெரிந்து கொண்டோ புரிந்திருந்தால், 3 வருடங்களுக்குக் குறையாத மற்றும் 5 வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 20 மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது திட்டத்தின் பங்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை நாணயத்தின் முழுத் தொகையின் இருமடங்கு என்பவற்றில் எது கூடியதோ, அத்தொகையை கொண்ட அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com