சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை.

பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக் கொடுக்க நாங்கள் தயார் இல்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வெல்லவாய – தன்தும சந்தியில் நேற்று (ஜூலை 19) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டின் பிரச்சினை தொடர்பில் விழிப்புணர்வுடனேயே நாங்கள் செயற்படுகின்றோம்.

நாங்கள் தேசிய தொழிற்சாலைக்கு முதன்மைத்துவம் வழங்குவோம். வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருள்களும் கொண்டுவரும் வரை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அம்பாந்தோட்டையில் உப்பு வைத்துக் கொண்டு இந்தியாவில் இருந்து உப்பு கொண்டு வரப்படுகின்றது.

இவை மாற்றமடைய வேண்டும். அனைத்து பொருள்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்த யுகத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை அதிகரித்து, தனிநபரின் வருமானத்தை அதிகரித்தோம். மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்தது. புதிய நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியது.

நாங்கள் புதிதாக துறைமுகம், விமான நிலையம் அமைத்தோம். அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்கினோம். கடந்த அரசு துறைமுகத்தை விற்பனை செய்தது. நாங்கள் அதிகாரத்திற்கு வந்தமையினால் விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது.

துறைமுகத்தை விற்பனை செய்யும் நேரத்தில், அம்பாந்தோட்டை மக்களின் வாக்குகளில் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்த போதிலும், இதனை விற்பனை செய்ய வேண்டாம், இது எங்கள் சொத்து என கூறுவதற்கு ஒரு அமைச்சருக்கும் தைரியம் வரவில்லை.

எனினும் ஒன்றையும் விற்பனை செய்யவிடமாட்டோம் என சஜித் தற்போது கூறுகின்றார். நாங்கள் இந்த நாட்டின் சொத்துக்களை ஒருவருக்கும் விற்பனை செய்ய இடமளிக்க மாட்டோம். அந்த சொத்துகளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்காகவும் பாதுகாக்க வேண்டும்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியினை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுகின்றார்கள் என பத்திரிகையில் பார்த்தேன். நாங்கள் சிறிங்கா சுதந்திர கட்சியை அமைத்தவர்கள். பண்டாரநாயக்க, டீ.ஏ.ராஜபக்ச போன்றவர்கள்தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியே வந்து கட்சியை அமைத்தார்கள்.

சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கி, கட்சியை வலுப்படுத்தி, கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கும் எங்களால் முடிந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சி எங்கள் முதுகில் குத்தியது.

அதன் பின்னர் தான் நாங்கள் தாமரை மொட்டின் கீழ் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி, பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு தற்போது கட்சி ஒன்று உள்ளது. தற்போது கட்சியை வலுப்படுத்தி முன்நோக்கி செல்வோம்.

மைத்திரிபால சிறிசேன, என்னை அழைத்து பிரதமர் பதவியை வழங்கினார். அதற்கு முன்னர் 54 ஆசனங்கள் எங்களுக்கு இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்க்கட்சி தலைமைப் பதவியை வழங்கவில்லை. பதினாறு ஆசனங்கள் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி வழங்கப்பட்டு 6 ஆசனங்கள் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சி பிரதான ஏற்பாட்டாளர் பதவி வழங்கப்பட்டது.

நாங்களும் தந்திரங்களை பயன்படுத்தி பிரதமர் பதவியை ஏற்று 52 நாள்களின் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றோம். தற்போது நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்து சிறிய காலப் பகுதிக்குள் மாகாண சபை தேர்தலை பழைய முறையிலாவது நடத்துவோம்.

நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து முன்னணிக்கு வந்துள்ளோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம். வாக்கு சண்டைகளுக்கு செல்ல வேண்டாம். 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவனாக இதனை ஆலோசனையாக கூறுகிறேன்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பிரேமதாச தரப்பு மற்றும் ரணில் தரப்பு என பிரிந்த அந்த இரண்டு தரப்பினரும் சிறிக்கொத்தவை கைப்பற்றவே ஆயத்தமாகின்றார்கள். இந்த நாட்டின் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிறிக்கொத்தவை கைப்பற்றவா வாக்களிக்க வேண்டும். அதனை காணி வழக்கு தாக்கல் செய்து தீர்த்துக்கொள்ள முடியும்.

கடந்த நாள்கள் நான் நாடு முழுவதும் சென்றேன். ஐக்கிய தேசிய கட்சியில் வாக்களிப்பதற்கு ஒருவர் இல்லை என அக்கட்சி உறுப்பினர்கள் என்னிடம் கூறினார்கள். ஐக்கிய தேசிய கட்சி நாட்டை கைப்பற்ற ஆயத்தம் இல்லை. கட்சியை பிடிப்பதற்கு மாத்திரமே ஆயத்தம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வேலைத்திட்டங்கள் சிறப்பாக – தெளிவாக – வலுவாக உள்ளதென இன்று ஐக்கிய தேசிய கட்சியினரும் கூறுகின்றார்கள். அந்த அனைவரையும் இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு அதிகாரத்தை இந்த தேர்தலில் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

அரசியலமைப்பை மாற்ற, நாட்டிற்கு பொருத்தமான, ஒற்றுமையை பாதுகாப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு நாங்கள் ஆயத்தம்.
பிரபாகரன் துப்பாக்கியில் பெற முயற்சித்த நாட்டை பேனையில் வழங்க நாங்கள் தயாரில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் கிட்டட்டும் – என்றார்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com