பாராளுமன்ற கௌரவத்தைப் பாதுகாப்பது உறுப்பினர்களினதும் பொறுப்பாகும்!

5e3bd17765e820213981ad5d80fbce34_Lமேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு ஒழுக்கமும் முதிர்ச்சியுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேன்மை பொருந்திய பாராளுமன்றத்திற்கு மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள எல்லோரும் அது குறித்த தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று (04) காலை ஹொரனை ரோயல் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குப் பொருத்தமானவர்களுக்கு தமது பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டியது மக்களுக்குள்ள பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று முற்பகல் ஹொரனை ரோயல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். பெயர் பலகையைத் திரைநீக்கம் செய்து ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தினை மாணவர்களிடம் கையளித்தார். இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் நாகமரக்கன்று ஒன்றும் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைக்கான ஏற்பாடுகளை ஒதுக்குகின்ற போது அதனை மிகவும் முறையான ஒரு ஒழுங்கில் மேற்கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

1987 ஆம் ஆண்டு 80 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஹொரனை ரோயல் கல்லூரியில் தற்போது சுமார் 4300 மாணவர்கள் கல்வி கற்கின்ற அதேநேரம், அன்றிலிருந்து இன்று வரையான கல்லூரியின் அடைவுகள் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது. ஜனாதிபதியின் வருகையை நினைவு கூறும் வகையில் அதிபர் ஏ எ பி எல் குணதிலக்கவினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மேல் மாகாணசபை அமைச்சர்களான ரஞ்சித் சோமவம்ச, சுமித் லால் மெண்டிஸ், மேல் மாகாணசபை உறுப்பினர்களான கித்சிரி கஹட்டபிட்டிய, நிமல் சந்திரரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com