பாராளுமன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல்!

fa8eca0857884367726f4370ec4df5e9_Lபாராளுமன்றத்தில் நேற்று முந்தினம் நடத்தப்பட்ட செயலானது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகுமென பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பேச்சாளரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

மே தினத்தில் எதிர்கொண்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத கூட்டு எதிர்க் கட்சியினரே பாராளுமன்றத்தில் ஒழுங்கீனமாகவும், கீழ்த்தரமாகவும் செயற்பட்டனர் என தெரிவித்தார். சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு காயமேற்படுத்தி இரத்தம் சிந்த வைத்த இச் சம்பவத்தை கட்சித் தலைவர்கள் உட்பட அனைவருமே மோசமாகப் பார்ப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், விசாரணைகள் முடிவில் உரிய தீர்மானத்தை சபாநாயகர் எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோசமான சம்பவம் மிக மோசானதும் ஒழுங்கீனமானதுமாகும். சபையில் வாய் மூல வினாக்களுக்கான வேளையில் எதிரணியிலிருந்து தினேஷ் குணவர்தன எம்.பி. சபாநாயகரின் உத்தரவையும் மீறி எழுந்து செயற்பட்டார். வாய் மூல வினாக்கள் வேளை நிறைவுற்றதும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அப்போது சபாநாயகர் கூறிய போதும் கூட்டு எதிரணியினர் திட்டமிட்டு செயற்பட்டதையே காணமுடிந்தது. இச் செயலானது பாராளுமன்ற சபை செயற்பாடுகளையும் குழப்பியதுடன், மிக மோசமான செயற்பாடாகவும் அமைந்தது. இது தற்செயலாக இடம்பெற்றதல்ல. ஏற்கனவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விடயமென்பதைக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இதற்கு முன்பு பல சூடான சம்பவங்கள் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஊடகவியலாளர்களும் அதனை அறிவர். எனினும் பாராளுமன்ற எம்.பி. ஒருவருக்கு இரத்தக் காயம் ஏற்படும் வகையில் மிக கீழ்த்தரமான விதத்தில் அவர்கள் நடந்து கொண்டமை மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடக்க இடமளிக்க முடியாது. சபாநாயகர் இது தொடர்பில் கூட்டிய கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் அனைவரும் இதனை மோசமாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சபாநாயகர், மேற்படி சம்பவம் தொடர்பான ஒளிப்பதிவுகளை வைத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார். விசாரணைகளின் பின் அவர் விரைவான தீர்மானமொன்றை எடுப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com