சற்று முன்
Home / செய்திகள் / “பல கோடி ரூபா கொள்ளை” – தோட்டத் தொழிலாளர்களின் இரத்தம் உறிஞ்சிய பிசாசுகள் – அம்பலப்படுத்தியது தகவல் அறியும் சட்டம்

“பல கோடி ரூபா கொள்ளை” – தோட்டத் தொழிலாளர்களின் இரத்தம் உறிஞ்சிய பிசாசுகள் – அம்பலப்படுத்தியது தகவல் அறியும் சட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் (77,751,933) ரூபாவை தொழிலாளர்களிடமிருந்து 2016-2017ஆம் ஆண்டு சந்தாப் பணமாக பெற்றுள்ளது. அதேபோல, இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் இரண்டு கோடியே இருபத்தி நான்கு இலட்சம் (22,437,558.53), தேசிய தொழிலாளர் சங்கம் மூன்று கோடியே 45 இலட்சம் (34,524,328.41) என தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ அமைப்பு தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் கோரியிருந்த தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பில் மாற்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள் மாதாந்தம், வருடாந்தம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம், ஓராண்டுக்கு தொழிற்சங்கங்கள் செலவழித்த தொகை, எதற்காக? கடந்த 3 வருடங்கள் மேற்கண்ட தொழிற்சங்கங்களால் கிடைக்கப்பெற்ற ஆண்டு கணக்கறிக்கை போன்ற விடயங்களடங்கிய தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை மாற்றம் நேரடியாகவே சென்று தொழில் திணைக்களத்தின் தகவல் அதிகாரியிடம் கையளித்திருந்தது.

கேட்கப்பட்ட கேள்விகளுள் சிலவற்றுக்கு மாத்திரம் பதில் (தெளிவற்ற விதத்தில்) கிடைத்துள்ள போதிலும் ஒரு சில கேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருக்கவில்லை. அதற்கான காரணமும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொழிற்சங்கங்களின் ஆண்டு கணக்கறி​க்கைகளை தொழில் திணைக்களம் ​தர மறுத்தது.

“2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1) f பிரிவின் படி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையை தங்களுக்குத் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் சி.என். விதனாச்சியின் கையெழுத்துடன் கூடிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் மேன்முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டின்போது கிடைத்த பதிலுக்கும் முதல் விண்ணப்பத்தின்போது கிடைக்கப்பெற்ற பதிலுக்கும் இடையே பெரிதாக வித்தியாசத்தை காணமுடியவில்லை.

தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விவரம், ஒரு அங்கத்தவரிடம் அறவிடும் மாதாந்த சந்தாப் பணம், ஒரு வருடம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம் போன்ற தகவல்களை மாற்றத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அட்டவனையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிற்சங்கங்களின் தமிழ் பெயர்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம்

தேசிய தொழிலாளர் சங்கம்

மலையக தொழிலாளர் முன்னணி

தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு

இலங்கை செங்கொடி சங்கம்

மேலுள்ள அட்டவணையில் இடைவெளியாகக் காணப்படும் பகுதிகளில் திணைக்களம் “எங்களிடம் தகவல் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

அட்டவணையில் காணப்படும் முக்கிய விடயங்கள்

தொழிற்சங்கங்களிடமிருந்து இறுதியாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் உறுப்பினர் விவரங்களை கேட்டிருந்தோம். 2017ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற அறிக்கையைக் கொண்டே திணைக்களம் மாற்றத்துக்கு தகவல்களைத் தந்திருக்கிறது.

அதன்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் அங்கத்தவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ஒன்றரை இலட்சம் அங்கத்தவர்களையும் தேசிய தொழிலாளர் சங்கம் 21 ஆயிரத்து 280 அங்கத்தவர்களையும் கொண்டிருக்கின்றன.

இப்போது பெருந்தோட்டத்தில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களே வேலை செய்துவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் திணைக்களம் வசமிருக்கும் 3 தொழிற்சங்கங்களின் தொகை மட்டும் ஐந்தரை இலட்சத்தைத் தாண்டுகிறது.

நாம் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு (01.04.2016 – 31.03.2017) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் (77,751,933) ரூபாவை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது. அதேபோல, இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் இரண்டு கோடியே இருபத்தி நான்கு இலட்சம் (22,437,558.53), தேசிய தொழிலாளர் சங்கம் மூன்று கோடியே 45 இலட்சம் (34,524,328.41) என தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது.

குறித்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணத்தில் மேற்கொள்ளும் செலவுகள் என்னவென்று முதல் விண்ணப்பத்தில் கோரியபோது பதில் வழங்கப்படாததால், மேன்முறையீட்டின்போது செலவுகளை உள்ளடக்கிய ஆண்டு கணக்கறிக்கையை மாற்றம் கேட்டிருந்தது. அதற்கு தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1) f பிரிவின் படி தகவல் தரமுடியாது என்று தொழில் திணைக்களம் மறுத்துள்ளது.

இதனை எதிர்த்து மாற்றம் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com