சற்று முன்
Home / செய்திகள் / பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் அவல நிலை !

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் அவல நிலை !

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் அவல நிலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் முழுமையாக பிரசுரிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக சமுகத்தின் அங்கமாக – பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, கல்வி சாரா ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் பெறும் இந்த நாட்டின் சிரேஷ்ட பிரசைகளைப் பற்றி ஒரு முறையாவது நாம் யோசித்ததுண்டா?

“44 வருடங்கள் விரிவுரையாளராகவும், அதில் 27வருடங்கள் பேராசிரியராகவும் கடமையாற்றி 2002இல் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரின் கதையைக் கேளுங்கள்: தனது ஓய்வூதிய நிதிக்காக ரூபாய் பன்னிரெண்டு இலட்சத்தை (ரூபாய் 12,00,000) 1999இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு செலுத்திய அவர் பெறும் ஓய்வூதியம் ரூபாய் 25,000 மட்டுமே!”

“37 வருட பல்கலைக்கழக சேவையில் 35 வருடங்கள் ஆய்வு கூட உதவியாளராக பணி புரிந்து 2016இல் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் பெறும் ஓய்வூதியம் ரூபாய் 18,000 மட்டுமே!”

“28வருட பல்கலைக்கழக சேவையில் பாதுகாப்பு சேவகராக பணி புரிந்து 2014இல் ஓய்வு பெற்ற ஊழியரின் ஓய்வூதியம் ரூபாய் 9,800 மட்டுமே!”

“35வருட பல்கலைக்கழக சேவையை நிறைவுசெய்து 2009இல் ஓய்வுபெற்ற காலஞ்சென்ற பல்கலைக்கழக பணியாளர் ஒருவரின் மனைவி விதவைகள் ஓய்வூதியமாக ரூபாய் 3,700 மட்டுமே பெறுகின்றார்!”

 இவர்கள் ஓய்வூதியர்கள் என்றபடியால், சொற்ப ஓய்வூதியத்தினைப் பெறுகின்றபோதும், இவர்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளோ, நிவாரணங்களோ வழங்கப்படுவதில்லை. அண்மையில் கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை.
 இவர்களால் அரச ஓய்வூதியர் சங்கத்தில் இணையமுடியவில்லை. அதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
 இவர்களுக்கு பல்கலைக்கழகத்தினால் ஓய்வூதியர் அடையாள அட்டைகூட வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள், அரசாங்கத்தினால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகளையோ, சலுகைகளையோ பெறமுடியவில்லை.

ஏன் இவர்களுக்கு இந்த அவலநிலை?

1999இல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியத் திட்டம் ஒருமுறை தானும் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மீளவும் பரிசீலிக்கப்படுமென்ற சுற்று நிருபத்தை நம்பியே ஓய்வூதியத்தில் இணைந்தவர்கள் இவர்கள். இணையும் போது தமது சேமலாபநிதிச் சேமிப்பிலிருந்து 40%இனை ஓய்வூதியத்துக்காய் வழங்கினர். ஓய்வு பெறும் வரை மாதா மாதம் சேமலாபநிதி சேமிப்பின் 8%இனை வழங்கினர்.

சென்ற நூற்றாண்டில் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டின் சம்பள அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட, பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் தாம் ஓய்வு பெற்ற 2002ஆம் ஆண்டின் சம்பள அடிப்படையிலேயே இதுவரை ஓய்வூதியத்தை பெற்று வருகிறார்.

30 வருடங்கள் சேவையாற்றிய அரசாங்க ஊழியர் ஒருவர், 2016க்கு முன் ஓய்வு பெற்றிருந்தால் 2016ஆம் ஆண்டின் வேதன அடிப்படையிலும், அதற்கு பின் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வு பெற்ற கால வேதன அடிப்படையின் 90% இனையும் ஓய்வூதியமாகப் பெற, 2002இல் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் 60வயதில் 2002ஆம் ஆண்டின் சம்பள அடிப்படையில் 36%இனை மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுகிறார்.

அரசாங்க ஊழியரின் மரணத்துக்கு பின் அவர் மனைவி/ பராயமடையாத பிள்ளைகள் அதே 90%இனைப் பெற, ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரின் மரணத்துக்கு பின் அவரின் மனைவி/ பராயமடையாத பிள்ளைகள் 18%இனையே (36%இன் அரைவாசி) பெறுகிறார்கள்.

ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு நடப்பாண்டின் வாழ்க்கை செலவுப் படியின் அரைவாசியும் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்பட, பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு இதுவும் கிடையாது.

அண்மைக்காலத்தில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் கல்விசார் கொடுப்பனவு என்ற பெயரில் அடிப்படைச் சம்பளத்திற்கு மேலதிகமாக 115% – 167% வரை மேலதிக சம்பளமாக பெறுவதோடு அதுவும் ஓய்வூதியக் கொடுப்பனவு கணிப்பீட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஓய்வு பெற்ற கல்விசாரா ஊழியரும் ஓரளவு பாக்கியவான்களே! அவர்களுக்கும் மேலதிக இழப்பீட்டு படியான (MCA) 45% ஓய்வூதிய கணிப்பீட்டுக்குள் அடக்கப்படுகிறது

இதே போல் அண்மையில் ஓய்வு பெற்றவர்களுக்கு வாழ்க்கை செலவுப் படி (CLA) வழங்கப்படாவிட்டாலும் ஓய்வூதியக் கணிப்பீட்டுக்கு அந்தப் படி உள்ளடக்கப்படுகிறது.

ஆனால் நாங்கள் இங்கே கூறுவது தளர்ந்து போன முதியவர்களைப் பற்றி, பல பல்கலைக்கழகங்களின் ஆரம்ப கால ஆசிரியர்களையும் ஊழியர்களையும் பற்றி, காவோலைகளைப் பற்றி…

கொஞ்சம் கவனிப்பீர்களா? மக்கள் பிரதிநிதிகளாக வாக்கு கேட்டு வரும் பெரியவர்களே, இளைஞர்களே…

சில நிமிடங்கள் இவர்களை பற்றி சிந்திக்க முடியுமானால் மிக்க நன்றியுடையவர்களாவோம்

தொடர்புகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும்: திரு.இ.ஜெகதீசன், ஓய்வு பெற்ற பல்கலைக்கழக உள்ளக கணக்காய்வாளர்: 0212223843, 0775611950

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com