பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இரு தினங்களில் யாழில் 5 இளைஞர்கள் கைது !

Arrestedபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்றைய தினம் (05) கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் இரு சகோதரர்கள், இன்று (06) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் என்ற குறித்த சகோதரர்களை கைதுசெய்துள்ளதோடு, அவர்களுக்குச் சொந்தமான ஹயஸ் ரக வாகனம் ஒன்றையும் கொண்டுசென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டவர்களின் மூத்த சகோதரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் அவரை விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் ஆகியோரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களால் மேற்குறித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்தமைக்கான காரணங்கள் எவையும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அண்மையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த கைதுகள் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவருகிறது.

ஆவா குழுவிற்கும் தமிழ் இளைஞர்களுக்கும் தொடர்பில்லையென்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலராலேயே குறித்த குழு இயக்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜித கடந்த வாரம் பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு வருவதானது யாழ். மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com