பயங்கரவாதத்தை ஒழித்த வீரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இடமளிக்கப்போவதில்லை – தெல்லிப்பளையில் சந்திரிக்கா உரை

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த போவதில்லை என கூறியிருக்கும் நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொறுப்பாகவுள்ளவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்கள் எவ்வாறு காணமல் போனார்கள் என்பதற்கான பதிலையே அவர்களது உறவினர்கள் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க கோரவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்ற அவர் வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள பெரும்பாலான நிலங்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னமும் சொற்ப அளவு நிலங்களே விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் நான் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். இம் முறை நான் யாழ்ப்பாணம் செல்லும் போது மகிழ்ச்சியுடன் சென்றிருந்தேன். நாம் வடக்கை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பல திட்டங்களை வகுத்துள்ளோம். அந்தவகையில் பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம்.

குறிப்பாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதேபோன்று இராணுவம் போரின் போது கைப்பற்றிய மக்களது காணிகளை மீள மக்களிடம் கையளிக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் காணாமல் போனோர் தொடர்பாக நிர்மானம செயல்திறன் மிக்க தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியை கொடுத்துள்ளது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சுஇ இராணுவம் பொலிஸ் ஆகியோருடன் பேசி ஒரு திட்டத்தை தயாரித்துள்ளோம்.

இதன்படி யார் யார் காணமல் போனார்கள் என்பது தொடர்பான பட்டியல் ஒன்றை உருவாக்கி இதற்கான சட்டங்களை பாராளுமன்றம் ஊடாக நிறைவேற்றியுள்ளோம். தற்போது அச் சட்டமானது ஜனாதிபதியின் கையொப்பத்துடன் சட்டமாக நடமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இது இலகுவான காரியமாக அமையவில்லை. காரணம் முன்னால் ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதலாவதாக நாட்டின் ஒற்றுமையை குழப்பிக்கொண்டிருக்கிறார். இவர் இனவாதத்தையும் மதவாதங்களையும் தூண்டி போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கிறார். இப்படியான நிலையிலும் கூட நாம் இச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தோம்.

ஆனால் நாம் இச்சட்டங்களை நிறைவேற்றியதனூடாக இராணுவத்தை குற்றவாளிகளாக தண்டிக்கப் போவதில்லை. உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்கள் கோருவது காணாமல் போனவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற தகவலையே தவிர இராணுவத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரவில்லை. போர்தவிர்ந்து மக்களை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும் இந் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு குற்றவாளிகளாக தண்டனையை நாம் வழங்க மாட்டோம். நாட்டில் யுத்தம் நடந்த போது நாட்டில் இல்லாது வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் மக்கள் கூறுவது போன்று நாம் எதனையும் செய்துவிட முடியாது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com