பனை, தென்னையில் “கள்“ இறக்க அனுமதிப்பத்திரம் அவசியம் – கித்துளுக்கு தேவையில்ல !

தென்னை மற்றும் பனையிலிருந்து கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சு நேற்று (31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள் எடுப்பதற்கு மதுவரி திணைக்களத்தின் அல்லது உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயினும் கித்துள் மரத்திலிருந்து கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமில்லை என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ், கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமாக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 2013 இல் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனுமதிப்பத்திரத்தின் அவசியம் நீக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மதுபான தயாரிப்புக்காக தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் கள்ளின் அளவு தொடர்பிலான கணிப்பீடுகளை மேற்கொள்வதற்கு மதுவரி திணைக்களத்திடம் உரிய முறைமையொன்று காணப்படவில்லை.

அதன் பிரதிபலனாக, இலங்கையில் காணப்படுகின்ற மதுபான தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்க வேண்டிய மதுவரி வருமானம் தொடர்பில் சரியான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான முறை இல்லாததன் காரணமாக, அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய மதுவரி வருமானத்தை உரிய முறையில் உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் நிலவியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com