பனை அபிவிருத்தி கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி – முதலமைச்சர் உரை

13701180_1383642634985463_3725619681529476748_o
வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் தொடக்க நிகழ்ச்சி

22.07.2016 காலை 9 மணியளவில்

யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில்

பனை அபிவிருத்தி கண்காட்சி திறப்பு நிகழ்ச்சி

22.07.2016 பிற்பகல் 3.30 மணிக்கு

நல்லூர் சங்கிலியன் பூங்காவில்

பிரதம அதிதி உரை

 

குருர் ப்ரம்மா…………………

தலைவர் அவர்களே, கௌரவ விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்களே, கௌரவ வடமாகாண சபை அமைச்சர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, திணைக்கள அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே!

வடமாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடமாகாண பனை அபிவிருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சியில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வடமாகாணத்தின் குறியீடாக விளங்கக்கூடிய கற்பக தருவாம் பனை மரங்களை புதிதாக நாட்டுவதற்கும் பனை வளங்களை பெருக்குவதற்குமான ஒரு யுக்தியாக வடமாகாணசபை ஒவ்வொரு வருடமும் யூலை 22ம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதிக்கு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக பிரகடனப்படுத்தி கடந்த ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே.

வடமாகாணத்திலே வகைதொகை இன்றி காணப்பட்ட பனை வளங்கள் இப் பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான 30 ஆண்டுகால போரின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான பனை மரங்கள் பதுங்கு குழிகள் அமைப்பதற்கும் காப்பரண்கள் அமைப்பதற்கும் என பெருமளவில் தறித்து வீழ்த்தப்பட்டுள்ளன. எஞ்சியிருந்த பனை மரங்கள் பல தொடர் எறிகணை வீச்சுக்களால் சிரச்சேதம் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் இன்று வடமாகாணத்தில் அதுவும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பனை மரங்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பனை மரத்தின் பயன்பாடு பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் எமக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய பல விடயங்கள் தெளிவுக்கு வரும். எம்முட் பலர் வீடு கட்டுவதற்கு உபயோகப்படுத்தக் கூடிய ஒரு மரமே பனை மரம் எனத் தான்  தெரிந்து வைத்துள்ளோம். இதற்கும் மேலாக பனை மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பனை மர ஓலைக் குருத்தில் இருந்து அடி மூல வேர் வரை அனைத்துப் பகுதிகளும் எமக்கு உபயோகப்படுவன என்பதனை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 13735559_1383642504985476_8884112012853461656_o

பனம் பழத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பனாட்டு உணவுப் பொருளுக்கு மிகுந்த கிராக்கி இருக்கின்ற போதிலும் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்ற பனாட்டின் அளவு எமது தேவைக்கு மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்ற காரணத்தினால் இதற்குக் கூடிய விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

ஆனால் என்னுடைய இளமைப் பருவ காலத்தில் பனம் பழம் எமது முன்னோர்களின் உணவுப் பொருளாக இருந்து வந்தது. பனை மரங்களில் இருந்து பழுத்து விழும் நல்ல பனம் பழங்களை எடுத்து வந்து அவற்றின் பனுவில் மற்றும் வெளி தோற்பகுதியை அகற்றிய பின்னர் ஒரு மண் பானையில் இட்டு நீர் விட்டு நன்றாகப் பிசைந்து கழியை பிரித்தெடுத்த பின்பு பனம் விதைகளை அகற்றி அந்தக் கழிக்குள், (இதனை பனம் காடி என உள்ளுர் மொழியில் அழைப்பர்; என்று நினைக்கின்றேன்) நெருப்பில் நன்கு வாட்டி எடுக்கப்பட்ட பனம் பழங்களுள் சிலவற்றை அவற்றின் தோற்பகுதிகள் அகற்றப்பட்ட பின்னர் இட்டு சில மணிநேரங்கள் ஊற வைத்த பின்னர் அவற்றை மாம்பழத்தை சுவைத்து உண்பது போல சுவைத்து உண்டு தமது உணவை பூர்த்தி செய்து கொள்வர். ஒருவர் எத்தனை பனம் விதைகளை சுவைத்து உண்டார் என்பதை வைத்தே அவரின் உணவுத் தேவை திருப்திகரமாக அமைந்ததா என்பதை அறிந்து கொள்வார்கள்.

இதில் இன்னோர் சிறப்பு என்னவெனின் மேல் குறிப்பிட்ட ஊற வைத்த பனம் விதைகளைச் சுவைத்து உண்ணுகின்ற போது அதை உண்ணுகின்றவர்களின் பற்களும் மிக வெண்மையாகி சங்கு போலத் தோற்றமளிக்கும். பனம் பழக்காலத்தில் இப் பழங்களை உண்ணுகின்ற கறவை இனங்கள் கூட அவற்றின் பற்கள் வெண்மையாகி சிரித்தபடி நிற்பதை காணக்கூடியதாக இருக்கும். பற்களை சுத்தம் செய்வதற்கு பல் வைத்தியரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை என்பார்கள் வயோதிபர்கள் பலர். நான்கு பனம் பழங்கள் இவ் வேலையை நிறைவு செய்துவிடுவன என்பார்கள். போர்க்காலங்களில் சவர்க்காரத்திற்கு பெருந் தட்டுப்பாடு இப்பகுதியில் ஏற்பட்ட போது பனம் பழத்தில் இருந்து பெறப்பட்ட பனம் களியை உபயோகித்தே உடைகளைச் சுத்தம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

பனம்பழம், ஒடியல், புழுக்கொடியல், பதநீர், நுங்கு, புத்தூக்கி பிரியர்களுக்கான பனம் கள்ளு என உணவு வகைகள்; ஒரு புறமும் பனங்குருத்து, பனை ஓலை, பனம் ஈர்க்கு, பனம் பாளை, ஊமல், பனை மரம், பனை மர அடிக்குற்றி, பனை மர வேர்கள் எனப் பல பாவனைப் பொருட்கள் பல்வேறு உற்பத்திகளுக்கு மூலப் பொருட்களாக அமைந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளன. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பனந்தும்புகள் தூரிகை போன்ற பிற~; வகைகளை உற்பத்தி செய்வதற்கு பெரிதும் உதவுகின்றன. அதே போன்று பனையின் குருத்தோலைகள் பெட்டி, கடகம், பாய் போன்ற வீட்டுத் தேவைக்குரிய பொருட்களைத் தயாரிப்பதற்கும் பனம் ஈர்க்கானது சுளகு, நீற்றுப் பெட்டி, தொப்பிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், முற்றிய பனை ஓலைகள் வீடு வேய்வதற்கும், வேலி அடைப்பதற்கும், மாட்டிற்கு உணவாகவும் அமைகின்றன. அதே போன்று பனை மரமானது வீடு கட்டுவதற்கும், அதன் அடி மரக்குற்றி விறகுத் தேவைக்கும், வேர்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிற~; வகைகளைத் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக வருடந் தோறும் இடம் பெறக்கூடிய மழை வீழ்ச்சியின் அளவையும் அதிகரிக்கச் செய்வதற்கு பனைமரங்கள் ஒரு காரணியாக அமைவதைக் காணலாம். இத்தனை சிறப்புக்களுங் கொண்ட பனை மரங்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டியது எம் அனைவரதும் தார்மீக கடமையாக அமைவதுடன் எமது எதிர்கால சந்ததிக்கு எம்மவர்கள் இதுகாலமும்  பெற்று அனுபவித்த நன்மைகளையும் உணவு வகைகளையும் விட்டுச் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றன.

பனை மரங்கள் வளர்வதற்கு கூடிய நிலப்பரப்பு தேவையற்றது. ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியிலேயே ஓங்கி வளர்ந்து பயன்தருவதால் இவற்றை ஊடுபயிர்கள் நாட்டுவது போன்று தென்;னைமரங்களுக்கு இடையேயும் வேலிக் கரைகளிலும் மதில் கரைகளிலும் உருவாக்க முடியும்.

பனை மரங்களில் இருந்து பனம் பழம் தவிர்ந்த ஏனைய அனைத்து மூலப்பொருட்களையும் பெறுவதற்கு எமக்குக் கள் இறக்கும் தொழிலாளர்களின் உதவி தேவைப்படுகின்றது. பனங்குருத்தில் இருந்து பனையோலை, கருப்பநீர், கள், ஆகிய அனைத்து பொருட்களையும் பனையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு இத்தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆரம்பத்தில் கள் இறக்குந் தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்கின்ற கள்ளை தமது வீட்டில் வைத்தே விற்கின்ற ஒரு நடைமுறை காணப்பட்டது. இது அவ்வீட்டில் வசித்தவர்களுக்கு முக்கியமாகப் பெண் குழந்தைகளுக்கு இடையூறாக அமைவதைக் கண்டார்கள். இதனால் சங்கங்கள் அமைக்கும் முறை தொடங்கியது. தவறணைகள் திறக்கப்பட்டன.

1972ல் திரு.என்.எம்.பெரேரா அவர்கள் நிதி அமைச்சராக விளங்கிய காலத்திலேயே பனை தென்னை உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் என ஒரு கூட்டுறவு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் தவறணை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் கள்ளுத் தவறணைகள் ஒதுக்குப்புறமான இடங்களிற்கு (ஐளழடயவநன pடயஉநள) மாற்றப்பட்டதுடன் கூட்டுறவு துறை படிப்படியாக வளர்ந்து இத்தொழிலாளர்களுக்கு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுதியது. அவற்றுள் சில

  1. உற்பத்திக்கு நியாய விலை
  2. இரண்டு கிழமைக்கு ஒரு தடவை சம்பளம்
  3. சேம நிதி
  4. சேவை விஸ்தரிப்பு
  5. விபத்துக் காப்புறுதி ஆகியனவாகும்.

அத்துடன் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் இக் கூட்டுறவுச் சபைகளில் அங்கத்துவம் வகிப்பதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும், பணியாளரும் தமது தலைமைத்துவப் பண்பை விருத்தி செய்து கொண்டனர். மேலும் இச்சங்கங்கள் வளர வளர பனங்கட்டித் தொழிற்சாலை, சீனித் தொழிற்சாலை, கல்லக்கார உற்பத்தி போன்ற உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1978ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாய் இருந்த திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் முயற்சியின் பயனாக பனை அபிவிருத்திச் சபை என்ற ஒரு சபை முதன்முதலாக வட பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவே வடபகுதி மக்களின் அப்போதைய தமிழரின் ஒரே ஒரு கூட்டுத்தாபனம் அல்லது சபையாக விளங்கியது என்று கூறலாம். இச்சபையின் தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிபார்சின் பெயரில் பிரபல தொழிற்சங்கவாதி திரு.மு.ஊ.நித்தியானந்தா அவர்கள் பனம் பொருள் அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இத் தலைமை அலுவலகம் கொழும்புக்கு மாற்றப்பட்ட போதும் அதன் பணிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வந்தன. பனை அபிவிருத்தி சபை பற்றி நாம் சிந்திக்கும் போது திரு.க.நடராஜா அவர்களின் சேவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவருடைய காலத்திலேயே இச்சபை ஜனரஞ்சகமான ஒரு சபையாக விளங்கியது மட்டுமல்லாமல் பனை உற்பத்திப் பொருட்கள் மிகக் கூடியளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பல மில்லியன் ரூபா பெறுமதியான பனங்களி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

எனவே பனை அபிவிருத்தி என்பது தனியே மரங்களை வளர்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அதனுடன் இணைந்து சமூக மேம்பாட்டிற்கும் மேலதிக வருவாய்க்கும் வழிவகுத்து வந்துள்ளதை நாம் மறக்கக்கூடாது. பனை மரத்தில் இருந்து கள் இறக்கும் மற்றும் மூலப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைகளுக்கு நவீன முறையில் இயந்திரங்கள் இந்தியா போன்ற பிறநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள்கூட அவற்றைப் பாவிக்கின்றார்கள். அவற்றை நாம் இங்கு உபயோகிப்பதன் மூலம் இத் தொழிலை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

எனவே பனை மரங்களை கூடுதலாக நாட்டுவதன் மூலம் எமக்குத் தேவையான மூலப் பொருட்களை இலகுவில் பெற்றுக்கொள்வதுடன் மேலதிக தொழில் வாய்ப்புகளுக்கும் அவை வழிவகுப்பன. நவீன யுக்திகளைக் கையாள்வதன் மூலம் பனை மரத்தில் இருந்து மூலப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்ற சேவை இலகுபடுத்தப்படலாம். இதன் மூலம் பல இளைஞர் யுவதிகள் இத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாவன. சுற்றுச் சூழலையும் நாங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பனை போன்றே இப் பகுதியில் குறிப்பாக தென்மராட்சி பகுதியில் காணப்பட்ட பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்களும் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டு இப்போது அப் பிரதேசம் சூனியப் பகுதியாக காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் செல்வந்தர்கள் பலர் தென்மராட்சிப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னைப் பயிர்;ச் செய்கையில் ஈடுபட்டு நல்ல வருவாயைப் பெற்றுக் கொண்டனர். முன்னைய பிரதம நீதியரசர் கௌரவ U.D. தம்பையா அவர்கள் பளையில் தனக்கிருந்த தென்னந் தோட்டம் பற்றி அந்தக் காலங்களில் பெருமையுடன் பேசிக் கொள்வார்.

அதே போன்று அப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அன்றாட வீட்டு செலவுகளுக்கான வருவாயை அவர்கள் குடியிருந்த நிலங்களில் காணப்பட்ட தென்னை மரங்களில் இருந்தே பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான நிலையானதொரு வருவாய் தொடர்ந்து கிடைக்கப் பெற்றமையால் அப் பகுதி மக்களின் வாழ்க்கை முறைமை சிறப்பாக அமைந்திருந்தது. தற்போது இப்பகுதிகள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் நீண்ட கால இடப் பெயர்ச்சியின் விளைவாகவும், அப் பகுதியில் காணப்பட்ட நிரந்தர வருவாய்க்கான மூலோபாயங்கள் அழித்தொழிக்கப்பட்டதாலும் மீண்டும் மக்கள் அப்பகுதியில் குடியேறப் பின்நிற்கின்றார்கள்.

மீளத் தென்னங் கன்றுகளை நாட்டி அவற்றில் இருந்து பயனைப் பெறுவதற்கு ஆகக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருட காலப்பகுதி தேவைப்படுகின்றமையால் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு எப்படி வழங்குவது என்பது பற்றி ஆராயப்படல் வேண்டும்.

எது எப்படி இருப்பினும் தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டுந் தென்னங் கன்றுகளை நாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தனியே தென்னம் கன்றுகளுடன் மட்டும் நின்றுவிடாது ஊடு பயிர்களாக மா, பலா, போன்ற பழ மரங்களையும் நாட்டுவதற்கு ஊக்கப்படுத்துதல் அவசியம் ஆகும். தென்னைத் தோட்டங்களுள் சிறுகாலப் பயிர்கள் நாட்டுவது பற்றியும் பரிசீலிக்கலாம்.

இவ் விடயத்தில் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தென்னங் கன்றுகளை நாட்டுபவர்களுக்குப் பல்வேறு உதவிகளையும் மானியங்களையும் நல்கி வருவது பாராட்டுக்குரியது. இன்று நாம் நாட்டி வைக்கின்ற ஒவ்வொரு பனம் விதையும் தென்னங் கன்றுகளும் எமது எதிர்காலச் சந்ததிக்கு மூலாதாரமாக விளங்கப் போகின்றன என்பதை மனதில் இருத்தி நாம் அனைவரும் தென்னை பனை வள அபிவிருத்தி வேலைகளில் சிரத்தையுடன் ஈடுபடல் அவசியமானதாகும்.

இவற்றை இனம்கண்டு கொண்ட எமது கௌரவ விவசாய அமைச்சர் அவர்கள் தென்னை பனை வள அபிவிருத்தியில் அதிக அக்கறை காட்டி இயன்ற அளவு கூடுதலான தென்னை மரங்களையும் பனை மரங்களையும் நாட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. இவரின் முயற்சி வெற்றியளிக்கவும், எதிர்காலத்தில் வடபகுதி பனை தென்னை வளம் மிகுந்த ஒரு பிரதேசமாகச் செல்வச் செழிப்புள்ள பிரதேசமாக உருவாவதற்கும்  நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொண்டு எனது சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்வதுடன் இன்று மாலை நடைபெறவிருக்கின்ற தென்னை பனை அபிவிருத்தி கண்காட்சிகளிலும் உங்கள் யாவரையும் கலந்து கொண்டு இக்கற்பகதருக்களின் சிறப்புக்களை அறிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டி அமர்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com