பனாமா பத்திரங்கள் தொடர்பில் அரசு விசாரணைகளை ஆரம்பிக்கும்

பனாமா பத்திரங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ள சட்டவிரோத கம்பனிகளில் இலங்கையர்கள் எவருக்கும் தொடர்புகள் உண்டா என்பதுக் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண நேற்று(07) தெரிவித்தார். 
கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விரிவாக ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெருவித்தபோதே பிரதி அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து நாம் ஆராய்வோம் என்றும் அவர் கூறினார். “மில்லியன் கணக்கான பனாமா பத்திரங்கள் வௌிவந்துள்ளன. இதனடிப்படையில் 2 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத கம்பனிகள் பனாமா, சீஷெல்ஸ் போன்ற சிறிய நாடுகளில் இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதில் சுமார் 11 நாட்டுத் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 128 அரசியல்வாதிகளுக்கு தொடர்புகள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன.

இருப்பினும் ஆசியாவைச் சேர்ந்த எவரும் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது இதுவரை ஊர்ஜிதம் ஆகாத போதும் முன்னால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இதில் பங்கெடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். இவை சட்டவிரோத நிதி நிறுவனங்களாகும். தனவந்தர்கள் தமது கறுப்பு பணத்தை பதுக்குவதற்காக இவ்வாறான கம்பனிகளை மேற்படி நாடுகளில் ஆரம்பித்துள்ளனர். சீஷெல்ஸ் நாட்டில் 14 ஆயிரம் சட்டவிரோத கம்பனிகள் இருப்பதாகவும் இதில் 204 கம்பனிகளின் உரிமையாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com