பதவி விலகிய 6 அமைச்சர்களுக்கு பதிலாக தற்காலிகமாக 4 அமைச்சர்கள் நியமிப்பு

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி ஆறு அமைச்சர்கள் உட்பட 16 உறுப்பினர்கள் வெளியேறியதையடுத்து நான்கு புதிய அமைச்சர்கள் இன்று (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வியடைந்ததையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஆறு அமைச்சர்கள் உட்பட 16 சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியதோடு அரசு தரப்பிலிருந்தும் வெளியேறியுள்ளனர். இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் தனித்து இயங்கப் போவதாகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அறிவித்த நிலையிலேயே ஜனாதிபதி நேற்று இந்த புதிய நியமனங்களை வழங்கியுள்ளார். நேற்று பதவியேற்றுக் கொண்ட புதிய அமைச்சர்கள் தமக்கிருக்கும் அமைச்சுப் பதவிகளோடு மேலதிகமாக பதிலமைச்சுப் பதவிகளையும் வகிப்பர்.

நியமனம் செய்யப்பட்ட புதிய அமைச்சர்கள்

அனர்த்த முகாமைத்துவம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
விளையாட்டுத் துறை – பைசர் முஸ்தபா
திறன் அபிவிருத்தி விஞ்ஞான தொழில்நுட்பத்துறை – சரத் அமுனுகம
சமூக நலன்புரி தொழிலுறவுகள் – மலிக் சமரவிக்ரம

இந்தப் பதவிகள் தற்காலிகமானதெனவும் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் நிரந்தரமான புதிய அமைச்சரவை அமைக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை மாற்றம் முழுமையாக நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் புதுவருட விடுமுறை காரணமாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் செல்வதாலும் உடனடி அமைச்சரவை மாற்றத்துக்குரிய சாதகமான சூழ்நிலை ஏற்படாத நிலையிலேயே தற்காலிகமாக நான்கு பதிலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com