வடமராட்சியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு இன்று காலை முதல் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அப் பகுதியெங்கும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ பவள் கவசவாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. பவள் வாகனம் ஒன்றின்மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்தாக தெரியவருகின்றது.
காலையில் நெல்லியடியை அண்மித்த கலிகைச் சந்தி, துன்னாலை வேம்படிச் சந்தி ஆகியவற்றில் டயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் அந்த வீதிகளுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இவ்வாறு பெரும் பதற்றம் நிலவியபோதிலும் அதனைக் கட்டுப்படுத்த பொலிசார் அஞ்சுவதாகக் கூறப்பட்டது.
முதலில் இந்தப் பகுதிகளில் கலவர நிலை தோன்றியவுடன் பொலிஸார் அங்கு செல்ல முற்பட்டனர். எனினும் அவர்களுக்கும் அங்கு நின்ற இளைஞர்களுக்கும் முறுகல்நிலை தோன்றியது. இதனையடுத்து பொலிஸார் பின்வாங்கினர். அதன்பின்னர் பதற்றம் நிலவும் பகுதிகளுக்குள் பொலிஸார் உள்நுழையமுடியவில்லை. எனினும் வெளியிடங்களில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் வகான ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நாளை மரணச் மரணச்சடங்கு நிகழும்போது கொந்தளிப்புநிலை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பொலிஸார் அதனைத் தடுக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.