பணியாளர் குறைகளை விசாரிக்கும் பொறுப்பை மேலதிகாரிகளிடம் கொடுப்பது பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்க முற்படுவது போன்றது – வடக்கு முதலமைச்சர்

நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், மேலும் வேதனம், கொடுப்பனவுகள், இன்னோரன்ன விடயங்களைக் கவனிக்கும் அதே அலுவலர்களிடமே உத்தியோகத்தர்களைத் தமது குறைகளைக் கூறுங்கள் என்று கூறுகின்றோம். இது எந்தளவுக்குப் பயன் அளிக்கும் என்பதை இருந்தே பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந் நடைமுறையானது பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்க வைப்பது போல் தென்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் எனினும் இந்தப் பொறிமுறை வரவேற்கப்பட வேண்டியதொன்றும். நல்லாட்சியைப் பேண எடுத்த ஒரு நடவடிக்கையாகவே இதைக் காண்பதாகவும் குறிப்பிட்ட அவர் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான நீதியான தீர்மானங்கள் எடுத்தல் போன்ற பலவும் நல்லாட்சியின் அம்சங்கள். அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடமாகாணம் அவற்றில் முன்னணியில் நிற்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தினம் ஒன்றினை பிரகடனப்படுத்தலும் மற்றும் நடைமுறைப்படுத்தலும் – 2017 தொடர்பான நிகழ்வு பண்ணையிலுள்ள
உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில்
14.02.2017 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவரது உரையின் முழு வடிவம் வருமாறு,
பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………………
பிரதம செயலாளர் அவர்களே, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளர்களே, பிரதம கணக்காளர் அவர்களே, செயலாளர்களே, மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் உத்தியோகத்தர்களே!
இன்றைய இந்த நிகழ்வு சற்று மாறுபட்ட ஒரு விடயத்தை உள்ளடக்கியதான ஒரு நிகழ்வாகும். இவ்வளவு காலமும் திணைக்களங்களில், அலுவலகங்களில் அந்தந்த திணைக்கள மற்றும் அலுவலக தலைவர்கள் மேற்கொள்ளும் கட்டளைகளுக்கு அமையவே ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை ஆற்ற வேண்டிய ஒரு நிலைப்பாடு காணப்பட்டது. அதற்கும் மேலாக அவர்களின் இடமாற்றங்கள், நியமனங்கள், பதவி உயர்வுகள், வேதன உயர்வுகள் என்பன அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியிருந்ததால் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் எல்லா நேரங்களில் இல்லாவிடினும் சில சந்தர்ப்பங்களில் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்த இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஒரு வித்தியாசமான கோணத்தில் இப்பிரச்சனைகளை அணுக விரும்பி அதற்கான ஒரு மேடையை சாதாரண அடிமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறானதொரு நிகழ்வை இலங்கையிலுள்ள அனைத்து திணைக்களங்களிலும் சகல அரச நிறுவனங்களிலும் நடாத்துமாறு பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார். இன்றைய இந்த நிகழ்வு பிரதம செயலாளரின் கொத்தணியினரை உள்ளடக்கியதாக உள்ளது. இம்மாதம் 21ந் திகதி முதலமைச்சரின் அமைச்சு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வடமாகாணசபைக் கூட்டம் நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் அது வேறு விடயம்.

எமக்குக் கிடைத்த அறிவித்தலின் அடிப்படையில் வடமாகாண சபை இந்நிகழ்வை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து மூன்று குழுக்களை அமைக்கவிருக்கின்றது. பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற விடயங்களைக் கையாள்வதற்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைமை ஆணையாளர் அவர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம், மற்றும் அவர்களின் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைக் கொண்ட ஒரு சபையையும், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களுக்கு பிரதிப் பிரதம செயலாளர் நிதி மற்றும் உதவி பிரதிப் பிரதம செயலாளர் நிதி அவர்களைக் கொண்ட ஒரு குழுவும், ஏனைய விடயங்களுக்கு மூன்று பிரதிச் செயலாளர்களைக் கொண்ட ஒரு குழுவுமாகச் சேர்ந்து மூன்று குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சபைகளில் தமது பிரச்சனைகளை எடுத்துக்கூற இருக்கின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அல்லது கிடைக்கப்பெறாத வேதனங்கள் மற்றும் இடமாற்றம் போன்ற பிறகாரணிகள் பற்றி அந்தந்த குழுக்களிடம் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
எனது மனதுக்குப் படுவதொன்றை முதலில் கூறிவைக்கின்றேன். அதி கௌரவ ஜனாதிபதியின் தீர்மானம் நல்லதாக இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் விதம் சிக்கல் மிகுந்ததாகக் காணப்படும் என்றே நம்புகின்றேன். ஒவ்வொரு திணைக்களத்திற்கும் சுதந்திரமான குறைகேள் அதிகாரி (ழஅடிரனளஅயn) ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் நன்மை பயந்திருக்கும். எனக்கென்னவோ பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்க வைப்பது போல் இந்த நடைமுறை தென்படுகின்றது. எனினும் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளை ஒத்ததாக அமைந்துள்ளது என்று அறிகின்றேன். அதாவது ஒரு ஊழியரின் சேவையை முழுமையாகப் பெறவேண்டுமாயின் அக்குறிப்பிட்ட ஊழியர் தமது கடமை நேரத்தில் கடமைகளை 100 சதவீத சிறப்புடன் ஆற்றுவதற்கு அவர் மனஅழுத்தங்களுக்கு உட்படாதவராக இருத்தல் அவசியமாகும் என்பதால் அவரின் குறைகளைக் கேட்டறிந்து களைய அக்காலத்தில் வழிவகுத்திருந்தார்கள்.
அதனால்த்தான் காலக்கிரமத்தில் திணைக்களங்களில் பல்வேறு உதவித் திட்டங்கள், விழா முற்பணக் கொடுப்பனவு, புத்தகக் கொள்வனவுக்கான கொடுப்பனவு, இடர்கடன் கொடுப்பனவு, வீடமைத்தல் கடன் என பல்வேறு கடன் திட்டங்கள், இலகு தவணைக் கொடுப்பனவு மற்றும் குறைந்த வட்டி வீதம் அல்லது வட்டியற்ற கொடுப்பனவுகள் மூலம் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அதே போன்றே உத்தியோகத்தர் குறைகேட்க இந்தப் பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் நன்மை தீமைகளைப் பொறுமையாய் இருந்து பார்ப்போம். குறைகேட்கப் போகின்றவர்கள் சுயமாக இயங்கும் வேறு அதிகாரிகள் அல்ல என்பது ஒரு குறையாகவே எனக்குப் படுகின்றது. எனினும் உங்கள் குறைகளை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தினால் அவர் தன்னாலானதைச் செய்வார் என்ற உறுதிமொழியையும் இச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்கின்றேன். இத்தருணத்தில் எமது மக்களின் குணாதிசயங்களும் மனதிற்கு எடுக்கப்பட வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு அலுவலகத்தில் கடமைநேரம் காலை 7.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எமது ஊழியர்கள் எட்டு மணி அளவில்த் தான் தினமும் கடமைக்கு வந்தார்களாம். வெள்ளைக்காரர் யோசித்துப் பார்த்தார். இவர்களுக்கு வீடுகளில் பிரச்சனை போல் தெரிகின்றது. ஆகவே கடமை நேரத்தை 8.00 தொடக்கம் 5.00 மணியாக மாற்றி விடுவோம் என்று நினைத்து மாற்றி விட்டார். அவ்வாறு மாற்றிய பின்னர் ஊழியர்கள் காலை 9.00 மணி அளவில்த்தான் கடமைக்கு சமூகமளித்தார்கள். வெள்ளைக்காரத்துரைக்கு இப்போது விளங்கிவிட்டது. ஒன்றுமே விசாரிக்கவில்லை. பழையபடி கடமை நேரத்தைக் காலை 7.00 என்று ஆக்கிவிட்டு குiபெநச Pசiவெ இயந்திரம் ஒன்றைப் பொருத்திவிட்டாராம். எம்மவர்கள் அனைவரும் 6.55 மணிக்கே கடமைக்கு வந்துவிட்டார்களாம்.
கொஞ்சக் காலத்தில் இன்று தொடங்கப்படும் இந்த நடைமுறை கைவிடப்படுமோ என்று யோசிக்கின்றேன். ஏன் என்றால் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், மேலும் வேதனம், கொடுப்பனவுகள், இன்னோரன்ன விடயங்களைக் கவனிக்கும் அதே அலுவலர்களிடமே உத்தியோகத்தர்களைத் தமது குறைகளைக் கூறுங்கள் என்று கூறுகின்றோம். இது எந்தளவுக்குப் பயன் அளிக்கும் என்பதை இருந்தே பார்க்க வேண்டும். எனினும் இந்தப் பொறிமுறை வரவேற்கப்பட வேண்டியதொன்று. நல்லாட்சியைப் பேண எடுத்த ஒரு நடவடிக்கையாகவே இதைக் காண்கின்றேன். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான நீதியான தீர்மானங்கள் எடுத்தல் போன்ற பலவும் நல்;லாட்சியின் அம்சங்கள். அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடமாகாணம் அவற்றில் முன்னணியில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். தற்போது தகவல் அறியும் உரித்தும் நடைமுறைக்கு வந்துள்ளது. இவை ஜனநாயகத்தின் சிறப்பம்சங்கள்.

எனவே இன்றைய இந்த குறைகேள் மையமானது உங்களுடைய குறைகளில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய, நிவர்த்தி செய்யப்படவேண்டிய குறைகள் பற்றிக் கவனமாக ஆராய வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் முன்வைக்கின்ற அனைத்துக் கோரிக்கைகளும் உங்களுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இம்மையக் குழுக்களின் அதிகாரங்கள் ஊழியர்களின் மனோநிலைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு முறையாக வழிகாட்டி அவர்களை வல்லவர்களாக, சிறந்த உத்தியோகத்தர்களாக, ஊழியர்களாக, திணைக்களத்தின் மீது விசுவாசம் கொண்டவர்களாக மாற்றப் பாடுபடலாம். என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com