பட்டினி கிடந்து பசியால் மெலிந்து செத்திட நேர்ந்தாலும் – என்னதான் நடக்கிறது மாகாண சபை தனிலே !

Vakeesam # Newsவடக்கு மாகாண சபை தேவையான ஆக்கபூர்வமான விடையங்களிற்கு முன்னுரிகொடுப்பதில்லை என்றும் தேவையற்ற விடையங்களை விவாதிப்பதற்கு நீண்டநேரம் ஒதுக்குவதாகவும் பிரேரணை  மேல் பிரேரணையாக நிறைவேற்றி அவற்றை பலநூற்றுக் கணக்கில் கட்டிவைத்து பிரேரணை சாதனை ஒன்றிற்காக காத்திருப்பதுபோல செயற்படுவதானதுமாக குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபை  மீது அவ்வப்போது முன்வைக்கப்படுவதுண்டு.

வழக்கம்போல 26.05.2016 அன்றும், யுத்தத்தில் எல்லாம் இழந்த ஏதோ ஒரு நம்பிக்கையில் நம்பி வாக்களித்த இவர்களால் எமக்காக ஏதாவது திட்டங்கள் கொண்டுவரப்பட்டு எங்கள் வயித்துப் பசியாவது போக்கப்படுமா என ஒரு தேசம் காத்துக்கொண்டிருந்தது. அவர்களின் குராலய் ஒலிக்க இன்னும் எஞ்சிப்போயிருக்கும் ஒருசிலருள் ஒருவராய் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவையில் காத்திருக்கிறார் தனக்கு ஒதுக்கப்படும் நேரத்திற்காக.

ஆனால் நண்பகல் ஒருமணிவரை அவரிற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஒரு மணி கடந்த பொழுதில் ஒரு 15 நிமிடங்கள் பேச நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 15 நிமிடத்திற்காக அவர் நான்கு அமர்வுகளிற்குமேல் காத்திருந்திருக்கிறார் என்பதுதான் கொடுமையான நிலைமை.

பட்டினியால் சாகப் போகிறவர்கள் பற்றிக் கதைக்க இவர்களிற்கு நேரமில்லையாம் – உறுப்பினர் ரவிகரனின் உரை

பட்டினியால் சாகப்போகின்றவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு நான்கு கூட்டம் தள்ளிவந்திருக்கிறது. இப்போது கூட நேரம் கிடைக்குமொ என்றிருக்கிறது. ஏற்கனவே கதைக்கப்பட்ட விடையங்களை திரும்பத் திரும்ப கதைத்து நேரத்தைத்தான் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்

சபை அமர்வு ஆரம்பித்து மூன்று மணி நேரம் கடந்த பின்னரும் அந்த பத்திரிகையில் வந்த செய்தியினை பற்றியே விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் பட்டினியால் மக்கள் இறக்க உள்ளனர் அவர்களுக்கு உலர் உணவு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து பிரேரணை ஒன்றினை நான் முன்வைக்கவுள்ளேன்.

தவறான செய்தி தொடர்பான இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே போகுமாயின் எனது பிரேரணை இந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படாமல் அந்த மக்கள் பட்டினியால் செத்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது எனவே இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என கடுமையாக பேசியபின்னர்தான் அவர் பிரேரணை சமர்ப்பித்து உரையாற்ற 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் பட்டினியை எதிர்கொண்டுள்ள மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினூடாக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் மாகாணசபையில் பேசுவதற்குத்தான் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனுக்கு நான்கு அமர்வுகளாக முயற்சித்தும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வாக்களித்த மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் மிக முக்கியமான பட்டினிப்பிரச்சனை தொடர்பில் மாகாண சபையில் பேசுவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது என அவர் சபை குறித்து சலலித்துக்கொண்டு கூறியபோது அவரது குரலும் தழுதழுத்துப்போய்விட்டது.
ஆனால் அந்த மக்களின் வாக்குகளில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் ‪ சிறப்புரிமை‬ பத்திரிகைச் செய்தி ஒன்றினால் மீறப்பட்டுவிட்டாதாக அதனைக் கண்டித்து  மாகாணசபையின் ஒருநாள் அமர்வு முடங்கும் அளவிற்கு விவாதம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதுவும் அதே தினத்தில்தான்.

வைகாசி 26 ஆம் திகதிய அமர்வில் அப்படி என்னதான் நடந்தது ?

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை மஞ்சள் பத்திரிகை எனத் திட்டி சர்ச்சையைத் தொடங்கிவைத்தார்.   வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட்.  குறித்த பத்திரிகையை தூக்கி காட்டிய அவர் கடந்த செவ்வாய்க்கிழமை (24) வடமாகாண ஆளூநர் தலைமையில் நடைபெற்ற யாழ்.நகர அபிவிருத்தி கூட்டம்  தொடர்பில் குறித்த பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது எனவும் குறித்த செய்தியானது மாகாண சபை உறுப்பினர்களாகிய தங்களுடைய  சிறப்புரிமையை மீறும் செய்தி எனவே இந்த செய்திக்காக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியதோடு  மாகாண சபையின் நடைபெறும் விடயங்கள் அனைத்தையும் ஊடகவியலாளர்கள் செய்தியாகுவதாகவும் அதில் பெரும்பாலானவை தேவையற்றவை எனவும் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு சென்ற அவர் ஒரு கட்டத்தில் காட்டூர்ன் கீறி வெளியிடுகின்றார்கள் இவ்வாறான ஊடகங்களை தடைசெய்ய வேண்டும் என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை நகர அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது?

கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளூநர் தலைமையில் நடைபெற்ற யாழ்.நகர அபிவிருத்தி கூட்டத்தை,  மாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அதிகாரங்களுக்குள் ஆளூநர் தலையிடுகின்றார் என குற்றம் சாட்டி வடமாகாண முதலமைச்சரும் சபை உறுப்பினர்கள் பலரும் புறக்கணித்திருக்கிறார்கள். அக் கூட்டத்தில் யாழ்.தேர்த்தல் மாவட்டத்தை பிரிதிநிதித்துவ படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபையில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் உறுப்பினர்களின் வருகையின்மையால் கவலையடைந்த  ஆளுநர் இனிவரும் கூட்டங்களை தான் தலைமையேற்று நடத்தப்போவதில்லை எனக் கூறியதாகவும் இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தான் தொடர்ந்து கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தப்போவதாகவும்  செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த பத்திரிகை வெயியிட்ட செய்தி 

“முதலமைச்சரின் அனுமதியின்றி கூட்டம் – விலகினார் ஆளுநர் –   நடத்தினார் சுமந்திரன் – வடக்கு உறுப்பினர்கள் 31 பேர் புறக்கணிப்பு.” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த ஊடகம்.

ஊடகத்தின் செய்தியில் தவறில்லையே ! – எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்

இந்த செய்தியில் உறுப்பினர்களுக்கு எவ்வாறு அவ மரியாதை ஏற்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு செய்தி பிழை என்றால் அந்த செய்தி குறித்து மறுப்பு போட சொல்லாம் அல்லது அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்த செய்தியை விட மிக மோசமான செய்திகள் கூட மாகாண சபை பற்றி வெளிவந்து இருந்தன வடமாகாண சபை முதலாம் ஆண்டு நிறைவு குறித்து ஒரு பத்திரிகை மாணவர்கள் வரவு பதிவேடு மாதிரி உறுப்பினர்களுக்கு வரவு பதிவுகளை வெளியிட்டு செய்தி வெளியிட்டு இருந்தது .

மக்களின் பிரச்சனைகளை கதைக்க வேண்டிய மாகாண சபையில் அதனை கதைக்காது ஒரு தவறான செய்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் விவாதிக்கப்படுகின்றது. இதன் ஊடக பதவி மோகம் , உட்கட்சி மோதல் , தனி நபர் நலன் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. மக்கள் நலன் குறித்து பேச வேண்டிய இடத்தில் தனி நபர் நலன்கள் குறித்து பேசுகின்றோம் என தனது நிலைப்பாட்டினை விளக்கியிருந்தார் மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்.

எல்லா பத்திரிகைகளும் அந்த செய்திய வெளியிட்டிருந்தன ஏன் அந்த பத்திரிகையை மட்டும் குறிவைக்கிறார் என்பது புரியவேயில்லை. நாங்கள் கூட்டத்தைப் புறக்கணித்தது உண்மைதானே 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண ஆளூநர் , வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். அது தொடர்பில் எவரும் கதைக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவே யாழ்.நகரில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி ஆளூநர் தனது வரையாரையை மீறுகின்றார். என தெரிவித்தோம்.

மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அந்த மாகாண முதலமைச்சருக்கு உண்டு . ஆனால் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சருக்கு அந்த பொறுப்பை கொடுக்காது பாதுகாப்பு அமைச்சும் இலங்கை அரசாங்கமும் முட்டுக்கட்டை போடுகின்றது.

அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பணத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதை கட்டுப்படுத்த வடமாகாண ஆளூநர் கூட்டம் கூட்டினார். அது முதலமைச்சரின் அனுமதியின்றி அவரின் அதிகாரத்தில் தலையிடும் கூட்டம் என நான் அதற்கு செல்லவில்லை.

அதேபோன்றே யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு உள்ளூராட்சி அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சரின் தலைமையிலையே கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அவரின் அனுமதி இன்றி அந்த கூட்டம் கூட்டப்பட்டது.

எனவே அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என அந்த பத்திரிக்கைக்கு நான் தெரிவித்தேன் என்னை போல வேறு உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கலாம்.

அதேநேரம் அந்த கூட்டத்திற்கு உறுப்பினர்கள் சமூகம் அளிக்கவில்லை என யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் அனைத்திலும் செய்தி வெளிவந்து இருந்தது. ஆனால் உறுப்பினர் எதற்காக குறித்த ஒரு பத்திரிக்கையை மாத்திரம் குற்றம் சொல்கின்றார் என தெரியவில்லை பதிலுக்கு தனது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் ஆளுங்கட்சி உறுப்பினரான விந்தன் கனகரட்ணம்.

இது உங்கள் சபை எங்களைப் பற்றி எழுதிப்போடாதையுங்கோ

முன்று மணித்திலாலங்களிற்கு மேலாய் சர்ச்சைகளாய் இழுபட்டுக்கொண்டிருந்த சர்ச்சையை முடித்துவைத்துப் பேசிய வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், செய்தியை பிழையாக பிரசுரித்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிக்கை என ஆனோல்ட் குறிப்பிட்டதை பதிவேட்டில் இருந்து நீக்குவதாக தெரிவித்ததோடு ஊடகவியலாளகளை நோக்கி இது உங்களது மாகாண சபை எங்களை பாதிக்கும் செய்திகளை வெளியிடாதீர்கள். செய்தியை செய்தியாக எழுதுங்கள் கட்டுரைகளை கட்டுரைகளாக எழுதுங்கள். செய்திகள் உங்கள் தனிப்பட்ட விமர்சனங்களை எழுதாதீர்கள் என தெரிவித்திருந்தார்.

அதன் பின்புதான் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் பட்டினியை எதிர்கொண்டுள்ள மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினூடாக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் மாகாணசபையில் பேசுவதற்கு நான்கு அமர்வுகளின் பின் அனுமதி கிடைத்திருக்கிறது மாகாணசபை உறுப்பினர் ரவிகரனுக்கு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com