பட்டதாரிகளின் நிலை வேதனையளிக்கிறது – வடக்கு முதல்வர்

பட்டதாரிக்குரிய வேலைகள் எதுவும் வேண்டாம் ஏதாவது திணைக்களத்தில் சிற்றூழியர்கள் ஆகவேனும் ஒரு நியமனம் பெற்றுத்தாருங்கள் என்று வாராவாரம் எமது அலுவலகத்தை நோக்கிப் பல பட்டதாரிகள், டிப்ளோமா கற்கை நெறிகளை முடித்தவர்கள் படையெடுத்து வருகின்றார்கள். இவர்களின் துயரநிலை கண்டு  மிகவும் வேதனை அடைவதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறான பிரச்சனைகள் எதிர்காலத்திலாவது எழாதிருக்க ஒரு சிறப்பான ஆரம்ப முயற்சியாக கற்கை நெறிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றிய விளக்கங்களைப் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். படித்தவர்கள்கூட பாரம்பரிய தொழில்களில் ஈடுபட முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ் டிறிபேர்க் கல்லூரியில் 04.03.2016 நடைபெற்ற தென்னருவி வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,

பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………
தலைவர் அவர்களே, கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களே, வடமாகாண சபையின் கௌரவ உறுப்பினர்களே, கல்வி வலய அதிகாரிகளே, ஆசிரியர்களே, மாணவர்களே மற்றும் இங்கே கூடியிருக்கும் எனது சகோதர சகோதரிகளே,
தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், வலய அதிகாரிகள் மற்றும் தென்மராட்சி வணிகத்துறை ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்திருக்கின்ற ‘தென்னருவி வர்த்தகக் கண்காட்சி” நிகழ்வுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
இக் கண்காட்சி பல விடயங்களையும் உள்ளடக்கி, நன்கு திட்டமிடப்பட்டு பாமர மக்களும் பயன்பெறக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இக் கண்காட்சியானது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றேன். அவையாவன –
உள்ளூர் உற்பத்திகள் பற்றிய அறிமுகம்
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் பற்றிய விளக்கங்கள்
கற்கை நெறிகள் பற்றிய விளக்கங்கள் மேலும்
வங்கி அமைப்புக்கள் பற்றிய விளக்கங்கள்
ஒவ்வொரு துறைசார்பாகவும் அத் துறையுடன் ஈடுபாடு கொண்டவர்கள் தெளிவான அறிவைப் பெற்றுக்கொண்டு தத்தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. முதலாவது –
உள்;ர் உற்பத்திகள் பற்றிய ஓர் அறிமுகம் – உள்;ர் உற்பத்திகளை கைவிட்டு நாம் மேலைத்தேய உணவு முறைகளைப் பின்பற்றத் தொடங்கியதன் விளைவு மிக இள வயதிலேயே எம்மைப் பல நோய்கள் பற்றிக் கொள்ள இடமளித்துள்ளோம். முன்பெல்லாம் எமது மரக்கறி உணவுத் தேவைகளுக்கு தாய்மார்கள் தமது காணியை ஒரு முறை சுற்றிவர அன்றைய கறித்தேவைகள் நிறைவடைந்துவிடுவன. பனங்கீரை, பசளி, குமிட்டில், முருங்கையிலை, முருக்கங்காய், அவரைக்காய் என இன்னோரன்ன இயன்மருத்துவத்துடன் கூடிய மரக்கறிகள் அன்றைய உணவுக்காக சேகரிக்கப்பட்டுவிடுவன. உடலில் சற்று சளிப்பிடிப்பாக இருப்பின் மொசுமொசுக்கை இலையில் ஒரு சம்பல். முதுகு வலி அல்லது இடுப்பு நோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காலத்தில் அழஎந தடவுவதில்லை. பொருத்துமான கொடி இலையைப் பறித்து வந்து ஓட்டில் சூடாக்கி இடித்து தூளாக்கி பிட்டு மாவுடன் சேர்த்து பிட்டவித்துக் கொடுப்பார்கள். முதுகுவலி இருந்த இடந் தெரியாது போய்விடும். எமது தாய்மார்கள் இயற்கையாகவே ஆயுர்வேத சித்தமருத்துவ வைத்திய அறிவைப் பெற்றிருந்தார்கள் அந்தக் காலத்தில். உள்ளூர் உற்பத்திகள் பற்றிய பாண்டித்தியம் உடையவர்களாக இருந்தார்கள் அவர்கள்.

இன்று உள்;ரில் கிடைக்கக்கூடிய அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகளைத் தவிர்த்து மேல்நாட்டு நாகரீக உணவுவகைகளை அதிக பணஞ் செலுத்தி அளவுக்கதிகமாக உடலினுள் நோய்களுடன் சேர்த்து உட்செலுத்தி விடுகின்றோம். இதனால் சிறுவயதிலேயே குருதி அழுத்தம், நீரிழிவு என பல்நோய்களுக்கு ஆளாகின்றோம். எனவே உள்;ர் உணவு வகைகள் மற்றும் உற்பத்திகள் பற்றிய அறிவு எமது மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது.

நான் அரசியலுக்கு வரமுன் கொழும்பு 7இல் உள்ள என் வீட்டின் மேல்மாடியில் மண்போட்டு புல்வளர்த்து அதன் மேல் இயற்கை உரம் சேர்த்து வீட்டுக்குத் தேவையான பல மரக்கறிகளைத் தொட்டிகளில் வளர்த்துப் பயன் பெற்று வந்தேன். முக்கியமாக தோட்டக் கழிவுகள், குசினிக் கழிவுகளைக் கலப்பு உரம் செய்யும் கலங்களில் இட்டு அதன்மூலம் இயற்கை எருவை நானே உற்பத்தி செய்து வந்தேன். எமது மக்களும் வீட்டில் இயற்கைப் பசளையை உருவாக்க முன்வர வேண்டும். செயற்கைப் பசளைகளைப் படிப்படியாகக் குறைத்து அவற்றைப் பாவிக்காமல் விட வேண்டும்.

அடுத்து உள்;ர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் – இன்று பல உற்பத்தியாளர்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்கின்ற போதிலும் அவைபற்றிய தரம், தகைமை, மேன்மை பற்றி மக்களிடையே போதுமான விளக்கமின்மையால் உள்;ர் உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் குறைவடைந்து அவர்கள் உற்பத்தியையே சில தருணங்களில் கைவிட வேண்டியவராகின்றார்கள்.

இன்னொரு சாரார் தரமான உற்பத்திகளை உள்;ரில் தயாரிக்கக் கூடிய அறிவையும் அனுபவத்தையும் கொண்டிருக்கின்ற போதும் அவர்களின் உற்பத்திகள் ஏதோ காரணங்களால் வெளிச்சத்திற்கு வராது மளுங்கடிக்கப்பட்டுவிடுகின்றன. உள்ளூர் உற்பத்திகள் பற்றிய போதிய அறிவை மக்கள் மனங்களில் விதைப்பது அவசியம்.  உள்;ர் உற்பத்திகளின் தரம், அவற்றின் பாவனைகள் பற்றிய அறிவுபூர்வமான விடயங்களை மக்கள் மனதில் புகுத்துவதால் தரமான தயாரிப்புக்களை ஊக்குவிப்பதுடன் சந்தை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுக்க முடியும். இந்தக் கண்காட்சியில் வணிகம் தொடர்பான விழிப்புணர்வு, அவற்றில் எழக்கூடிய பிரச்சனைகள், அதற்கான தீர்வு போன்ற விடயங்களை பாடசாலை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் மனதில் ஒரு தெளிவான சிந்தனையை  ஏற்படுத்த முனைந்துள்ளார்கள். வரவேற்கத்தகுந்த ஒரு விடயம் இது.

அடுத்து கற்கை நெறிகளைத் தேர்ந்தெடுத்து நன்மை பெறக்கூடியதான கல்வி முறைகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

எமது மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கில் ஏதேதோ பாடங்களை தெரிவு செய்கின்றார்கள். அவற்றின்  பயன்பாடு என்ன, என்ன தொழில் முயற்சிக்காக அவற்றைக் கற்கின்றோம், தேர்ந்தெடுத்த கற்கை நெறியானது எமது எதிர்கால வாழ்வுக்கு எவ்வாறு பயன்படும் என்ற எந்தவிதமான அடிப்படைச் சிந்தனைகளுமின்றி பாடங்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். உள்வாரி அல்லது வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம் பெற்று வெளியேறிய பின்னர் அரச வேலை ஒன்றுக்காக அலைந்து அலைந்து காலத்தைப் போக்குகின்றார்கள்.
ஆனால் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இறுதியில் பட்டதாரிக்குரிய வேலைகள் எதுவும் வேண்டாம் ஏதாவது திணைக்களத்தில் சிற்றூழியர்கள் ஆகவேனும் ஒரு நியமனம் பெற்றுத்தாருங்கள் என்று வாராவாரம் எமது அலுவலகத்தை நோக்கிப் பல பட்டதாரிகள், டிப்ளோமா கற்கை நெறிகளை முடித்தவர்கள் படையெடுத்து வருகின்றார்கள். இவர்களின் துயரநிலை கண்டு நாங்களும் மிகவும் வேதனை அடைகின்றோம்.

இவ்வாறான பிரச்சனைகள் எதிர்காலத்திலாவது எழாதிருக்க ஒரு சிறப்பான ஆரம்ப முயற்சியாக கற்கை நெறிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றிய விளக்கங்களைப் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். படித்தவர்கள்கூட பாரம்பரிய தொழில்களில் ஈடுபட முன்வரவேண்டும்.

இவற்றுக்கான மேலதிக விளக்கக் குறிப்புகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக உயர்கல்வி நிறுவனங்கள், முறைசாராக் கல்விப் பிரிவுகள், உயர் தொழில்நுட்ப மாணவர்களின் பிரிவுகள் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வருகை தந்திருக்கின்றார்கள். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விடாமல் சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாணவ சமூகத்தை அவர்கள் நெறிப்படுத்துவார்கள் என்று எதிர் பார்க்கின்றேன். இந்த நெறிப்படுத்தல் வர்த்தகக் கண்காட்சி நிறைவு பெற்றதும் “மாணவ மாணவியர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்ப் பிரிவு” என்ற ஒரு தனியான அலகை கற்பித்தல் பாடங்களில் உள்ளடக்கி ஒவ்வொரு மாணவ மாணவியரும் என்ன என்ன துறையில் கற்கை நெறிகளை மேற்கொள்ள விரும்புகின்றனர், அந்தத் துறையில் எவ்வாறான பாடங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்பு வசதிகளை அவர்கள் பெற்றுக் கொள்;ளமுடியும் என்ற தெளிவான சிந்தனையொன்றை அவர்களின் மனத்தில் உருவாக்கி அவர்களை நெறிப்படுத்த வேண்டியது எம் அனைவருக்குமான தார்மீகக் கடமையாகும் என்பதை நாம் மறந்து விடாமல் இருப்போமாக.

நான்காவதாக வங்கி அமைப்புகள் பற்றிய விளக்கக் குறிப்புக்களை வழங்குவதற்காக 5-6 வங்கிகள் இங்கே சமூகமளித்திருக்கின்றன என்று அறிகின்றேன். எமது மக்களில் பலர் கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தின் பயனாக வீடு, வாசல், சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து வாழவழிதெரியாது அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்தபோது சில கடன்தரும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி கார் வாங்குங்கள், மோட்டார் சைக்கிள் வாங்குங்கள், உழவு இயந்திரம் வாங்குங்கள் 100 சதவீதம் கடன்வசதிகள் செய்து தருகின்றோம் எனக் கூறி அவர்களுக்குக் கடன் கொடுத்து அதைக் கட்ட முடியாமல்ப் போன போது கொடுத்த வாகனங்களைப் பிடுங்கிச் சென்றுவிட்டார்கள்.

இன்று இங்கே வந்திருக்கக்கூடிய வங்கியாளர்கள் அப்பேர்ப்பட்டவர்கள் அல்ல. மக்கள் நலனில் கவனம் செலுத்துபவர்கள் அவர்கள். வங்கிகளின் செயற்பாடு பற்றியும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வங்கியின் உச்சப் பயன்பாட்டை பெற்றுக் கொள்வதற்கு எவ்வகையில் அணுக வேண்டும் என்ற விடயங்களைப் பற்றியும் தெளிவுபடுத்தி வங்கியில் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளின் தன்மைகள் போன்ற விடயங்களை எமக்கு எடுத்துரைக்க வந்துள்ளார்கள். வங்கியின் பொருளீட்டத்தை மட்டும் கருத்தாகக் கொள்ளாது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தன்மைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து அவர்களுக்கு, அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு ஏற்புடையதான இலகு தவணை கொடுப்பனவு முறைகளை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களையும் வளமானவர்களாக்கி வங்கியையும் வளமடையச் செய்ய வேண்டுமென்ற கருத்தில் செயற்படுவார்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.

இவ்வாறாக அனைத்துச் சிறப்புக்களையும் ஒன்று சேர இணைத்துக் கொண்டு ஒரு மிகச்சிறப்பான வர்த்தகக் கண்காட்சி நிகழ்வொன்றை தென்மராட்சி கல்விவலயம் முன்னெடுத்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது. இவ்வாறான நிகழ்வுகள் குறிப்பிட்ட ஒரு பகுதியுடன் மட்டும் நின்றுவிடாது அனைத்து வலயங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான அரிய பல கருத்துக்களை கண்காட்சிகள் மூலமும் இயல் இசை நாடகம் போன்ற முத்தமிழ் நிகழ்வுகள் மூலமும் மக்களுக்கு இயல்பாகவே புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எடுத்துக் கூற நாம் முன்வரவேண்டும்.
நொந்துபோன எமது சமூகம் விரைவாக இயல்புநிலையை அடைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும். அதற்கு இது போன்ற நிகழ்வுகள் முன்மாதிரியாகத் திகழவேண்டும் என தெரிவி;த்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com