பட்டதாரிகளால் முடங்கிய வடக்கு அவை – முதலமைச்சர் வெளியேற்றப்பட்டார்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மாகாண சபைக்குள் செல்லும் பிரதான வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அமர்வை நடத்த சபைக்குள் செல்ல முடியாமல் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியேறிச் சென்றார்.

அரச நியமனங்களை வழங்குமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாணப் பட்டதாரிகள் கடந்த 71 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 72 ஆவது நாளான இன்று வடக்கு மாகாண சபைக்கு முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபை அமர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வடக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் போன்றோர் சென்றிருந்தனர்.

ஆனால் அவர்களில் எவரையும் உள்ளே செல்ல வேலையற்ற பட்டதாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

பின்னர் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அங்கு சென்றார். அவரையும் உள்ளே செல்ல விடாத பட்டதாரிகள் அவருக்கு எதிராகக் கோசம் எழுப்பினர்.

கிழக்கு மாகாண சபையினால் அங்குள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு செய்ய முடியுமாயின் வடக்கு மாகாண சபை ஏன் செய்ய முடியாது எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வடக்கு முதல்வர், அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மற்றொரு தடவை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன். அதன் பின்னர் உங்களுக்கு முடிவை அறிவிப்பேன் என்றார்.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதனால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டி உள்ளது எனவும் அவர் பட்டதாரிகளுக்கு விளக்கமளித்தார்.

எனினும், இவ்வாறுதான் தொடர்ச்சியாக தாங்கள் ஏமாற்றப்படுவதாகவும், உரிய நடடிவக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பட்டதாரிகள் தொடர்ந்து  வலியுறுத்தினர்.

இதனையடுத்து வடக்கு முதலமைச்சர் அந்த இடத்தை விட்டு வாகனத்தில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com