படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரிப் போராட்டம்

கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும் விடுவிக்கக்கோரி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (27)கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் விதை உற்பத்திப் பண்ணை வட்டக்கச்சியில் அமைந்துள்ளது. 441 ஏக்கர் பரப்பளவிலான இப்பண்ணையில் போருக்குப் பிறகு 31 ஏக்கர் மாத்திரமே மாகாண விவசாயத்திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மீதி 370 ஏக்கரில் இராணுவத்தினரும் சிவில்பாதுகாப்புப்படையினரும் நிலைகொண்டுள்ளனர். இங்கு இவர்கள் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்குப் போட்டியாகச் சந்தையில் விற்பனை செய்தும் வருகின்றனர்.

இரணைமடுச் சந்தியில் உள்ள 9 ஏக்கர் அளவிலான சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும் இன்று இராணுவத்தின் முகாமே உள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் விவசாயப் போதனாசிரியர்களுக்கும் இந்நிலையத்தில் வழங்கப்பட்டுவந்த பயிற்சி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும் படையினரிடம் இருந்து விடுவிக்குமாறு வடக்கு முதலமைச்சரும், விவசாய அமைச்சரும் ஜனாதிபதியிடம் பல தடவை கோரிக்கைகள் வைத்தபோதும் இதுவரையில் சாத்தியமாகவில்லை விவசாய அமைச்சரின் கோரிக்கைக் கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலகத்தில் இருந்து, அக்கடிதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உரியநடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே தவிர, விடுவிப்பதற்கான எந்தச் சாதகமான பதிலும் பாதுகாப்புத் தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலைலேயே கிளிநொச்சி மாவட்ட அமைப்புகள் விதை உற்பத்திப் பண்ணையையும் சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும் விட்டு இராணுவம் வெளியேறி, அவற்றை விவசாயத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி உள்ளனர். வட்டக்கச்சிப் பண்ணை முன்பாகத் திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றுள்ளனர்.
ஊர்வலத்தின் முடிவில் வட்டக்கச்சிப் பண்ணையையும் இரணைமடு சேவைக்காலப்பயிற்சி நிலையத்தையும் உடனடியாக விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முகவரியிட்டு எழுதிய கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடமும், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடமும் கையளித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலத்தில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com