பகல் கனவு காணாதீர்கள் – உங்களிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கும் வித்தியாசமில்லை – ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சாடிய மங்கள சமரவீர

“ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக் கொள்ளும் நீங்கள் எந்தவொரு சட்டரீதியான ஏற்றுக்கொள்ளலும் இல்லாமல் சட்டரீதியற்றவகையில் நிழல் அமைச்சுக்களை நியமித்து எப்படிச் செயற்படுகின்றீர்களோ அவ்வாறே சட்டரீதியற்ற வகையில் உருவாக்கப்பட்டு உருத்திரகுமாரன் தலைமையில் செயற்படும் நாடுகடந்த தமிழீழம் என்கின்ற அமைப்பு குழுவொன்று செயற்பட்டு வருகிறது.  அவர்களும் செயற்படுகிறார்கள். எனினும் சட்டரீதியாக அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழம் என்ற பெயரில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமோ அல்லது நாடோ உலகில் எந்தவொரு பகுதியிலும் இல்லை நாடு கடந்த தமிழீழம் எனத் தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிபோல கனவுகண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று(25) வாய்மூல விடைக்காக உதய கம்மன்பில எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். உருத்திரகுமாரன் தலைமையில் 135 உறுப்பினர்களைக் கொண்ட நாடு கடந்த தமிழீழம் என்ற சட்டவாக்க சபையும், பாராளுமன்றமும் செயற்பட்டு வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியுமா என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்: சர்வதேச ரீதியாக வியாபித்துள்ள தமிழ் ஈழ அரசாகங்கமென அழைக்கப்படும் அரசாங்கம் எதுவும் இல்லை. எனினும் நாடு கடந்த தமிழீழம் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் நபர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை எந்தவொரு நாடோ, ஐக்கிய நாடுகள் சபையோ, சர்வதேச அமைப்போ சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

“ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக் கொள்ளும் நீங்கள் எந்தவொரு சட்டரீதியான ஏற்றுக்கொள்ளலும் இல்லாமல் சுதந்திரமாக செயற்பட்டு வருவதைப்போன்று உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நிழல் அமைச்சுக்களை நியமித்து செயற்படுவதுபோல அவர்களும் செயற்படுகிறார்கள். எனினும் சட்டரீதியாக அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை முதலில் தடைசெய்தநாடு அமெரிக்கா. எனவே அங்கு எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கோ அல்லது அதற்கு ஆதரவான அமைப்புக்கோ சட்டரீதியான அனுமதி எதுவும் வழங்கப்படாது. நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் எந்தவொரு நிறுவனமோ அல்லது நாடோ உலகில் எந்தவொரு பகுதியிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் பணியகம் ‘தமிழ் ஈழம்’ என்பதை அதன் இணையத்தளத்தில் ஒர் வகைப்படுத்தப்பட்ட நாடாக பட்டியற்படுத்தியது. இது தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டு அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. மறுநாளே இது நீக்கப்பட்டது.

தமிழ் ஈழம் என்பதை ஓர் நாடாக எப்போதும் அங்கீகரிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா எழுத்துமூலம் அறிவித்தது. இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் தொகைமதிப்பில் உள்ளடக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

டென்மார்க் குடிவரவு சேவை இணையத்தளத்தில் டென்மார்க்கின் விசா பெறும் தகுதியுடைய நாடாக தமிழ் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பிழை நிவர்த்தி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி டென்மார்க் அரசாங்கம் தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தது என்றார்.

அரசாங்கம் தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா, கடனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தடை செய்யப்பட்ட நபர்கள், தொகுதிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் இயக்கமும் உள்ளது. இது தொடர்பில் அரசு விழிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com