நேரடி விவாதத்திற்கு சுமந்திரன் அழைப்பு!

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள், முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என போலி தேசியம் பேசுபவர்களாக இருப்பினும், அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்தியில் குழுப்பநிலையை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நிமலன் சௌந்தர நாயகத்தின் 17வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

சமஷ்டி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை, சமஷ்டியை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்கவர்கள். இது சிங்கள மக்களுக்கு எதிரானது என எவரும் கூற முடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூற வேண்டும்.

ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்கள் பார்த்து பயப்படும் ஒன்றாக இருக்க கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்த செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்க்க வேண்டும். அனைத்துப் பாராளுமன்ற சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என உபகுழு அறிக்கையிலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் சிங்கள மொழி மேலோங்கும் என கூறப்படவில்லை, வருகின்ற சட்டத்திலே மூன்று மொழிகளுக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

எங்களுடைய மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது என எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளோம். இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம் சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடன் யார்? மூடத்தனமாக, மக்களை வீணாக உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணான பீதியை செலுத்தி இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மளுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

2000.11.07ம் திகதியன்று மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் வைத்து நிமலன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  முறக்கொட்டான்சேனை – தேவபுரம் பகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்றுத் தெற்குப் பிரதேசக் கிளைகளின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமா எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்ம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிமலன் சௌந்தர நாயகம் மரணித்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரை இதுவரை நினைவுகூராத தமிழரசுக்கட்சி தற்போது தேர்தல் காலம் நெருங்கும்போது நினைவுகூரல் நிகழ்வினை நடாத்துவது குறித்து சில இளைஞர்கள் இக் கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டனர். இதனால் சில நிமிட நேரம் அமளிதுமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தகக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com