சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / நெளிய வைத்த வீரமணி… நெகிழ வைத்த மல்லை சத்யா!

நெளிய வைத்த வீரமணி… நெகிழ வைத்த மல்லை சத்யா!

கூட்டணி யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது ம.தி.மு.க.
மக்கள் நல கூட்டியக்கத்தின் தொடக்கம், கூட்டணி தொடர்பாக ம.தி.மு.க-வினரிடம் எழுந்துள்ள சலசலப்பு, பாலவாக்கம் சோமு தி.மு.க-வில் இணைந்தது என ம.தி.மு.க-வை மையப்படுத்தி அதிர்வுகள் எழுந்த நிலையில் இந்த மாநாடு நடைபெற்றது.
பெரியார் படத்தைத் திறந்துவைத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் இருப்பவர்கள் எல்லாம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்கள். இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் நலன் காக்கப் பாடுபடும் இயக்கமாக திராவிடர் இயக்கம் உள்ளது. இன்றைய சூழலில், திராவிட இயக்கத்துக்கு மதவாதத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. திராவிடக் கொள்கைகளை அ.தி.மு.க கைவிட்டுவிட்டது. அண்ணா பெயரில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, அண்ணாவின் பெயரையும் படத்தையும் மட்டும்தான் பயன்படுத்துகிறது. கொள்கைகளை அல்ல.
வைகோவிடம் இதைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. நீங்கள் பல கட்சித் தலைவர்களுடன் மேடை ஏறுகிறீர்கள். அவர்களுக்கு இங்குள்ள படங்களில் இருப்பவர்கள் யார் என்பதுகூட தெரியாது. நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பொது நலனுக்காக இணைந்து குரல் கொடுங்கள். ஆனால், தேர்தல் என வரும்போது தெளிவாகச் சிந்தித்து சரியான முடிவை எடுங்கள். திராவிட இயக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவாலை நாம் எதிர்கொள்ளும் வகையில் உங்கள் முடிவு இருக்க வேண்டும். ‘தன்மானமா? இனமானமா? என்கிறபோது, இனமானத்துக்காக தன்மானத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை’ என்றார் பெரியார்.
எனவே தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டாலும், இனமானத்துக்காக நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். எறும்பையும், தேனியையும்விட சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகக் கூடாது. சரியான திசையில், சரியானபடி நீங்கள் பயணிக்க வேண்டும்’’ என்று விறுவிறுவென பேசினார். அதாவது, தி.மு.க கூட்டணில் ம.தி.மு.க இடம்பெற வேண்டும் என்ற தன் விருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்திய வீரமணியின் பேச்சால், சற்று இறுக்கத்தோடும், சங்கடத்தோடும் வைகோ காணப்பட்டார்.
‘‘கட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது. நேர்மையாக இருக்கிறோம். இருப்பினும் நாம் உயரத்தை எட்ட முடியாததற்கு என்ன காரணம்? அதை நாம் சிந்திக்க வேண்டும். எங்கோ தவறு செய்கிறோம். அதை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்” என ஈரோடு கணேசமூர்த்தி, ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் பேசினர். நிர்வாகிகள் கூட்டத்தில் சொல்ல வேண்டிய ஆலோசனையை இங்கு அவர்கள் சொன்னபோது அவர்களை உன்னிப்பாக கவனித்தார் வைகோ.
துணைப்பொதுச்​செயலாளர் மல்லை சத்யா பேச்சு வைகோவை கைதட்ட வைத்தது. ‘‘அ.தி.மு.க-வை திராவிட இயக்கமாகப் பார்க்க முடியாது. தி.மு.க-வும் கொள்கையை மறந்து, இனமானத்தை மறந்து வருமானம் ஒன்றையே இலக்காகக்கொண்டு இயங்கி வருகிறது. திராவிட இயக்கத்தை வழிநடத்தும் ஒரே இயக்கம் ம.தி.மு.க-தான். பாலவாக்கம் சோமு தி.மு.க.வுக்கு தாவிவிட்டார். என்ன நடந்தது காஞ்சியில்? எதுவும் நடக்கவில்லை. அவரோடு உடன்கட்டை ஏற யாரும் தயாராக இல்லை. கலைஞர் அவர்களே, ஏன் இவ்வளவு தள்ளாட்டம்? கட்சி நடத்த உங்களுக்கு ஆள் இல்லையா? அப்படியென்றால், தி.மு.க-வை கலைத்துவிட்டு ம.தி.மு.க-வுடன் இணைத்துவிடுங்கள். எங்களுக்குக் காலம் இருக்கிறது. வைகோவின் ‘டர்ன்’ எனப்படும் அந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ம.தி.மு.க-வில் இணைகிறார்கள் என்ற செய்தி வரப்போகிறது. அதைக் காண்பதற்கு நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுதலாக இருக்கிறது” என்று தி.மு.க-வையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சிக்க, கைதட்டி குதூகலித்தார் வைகோ. மல்லை சத்யா பேசி முடித்துவிட்டு வந்தபோது, இருக்கையில் இருந்து எழுந்து சென்று, அவரை கட்டிக்கொண்டார் வைகோ.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, “தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் கொள்கை தேவை. இங்குள்ள இரண்டு கட்சிகளைப் பார்த்து திராவிடத்தை எடைபோட வேண்டாம். வைகோ தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டியது அவசியம். கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்பது தவறல்ல. இங்கு, மிகப் பெரிய அரசியல் மாற்றம் தேவை. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை வைகோ கைப்பற்ற வேண்டும்” என்று பேசினார்.
பிறகு மைக் பிடித்த வைகோ, “எடுத்த எடுப்பிலேயே அ.தி.மு.க-வின் பக்கம்தான் என் அஸ்திரங்களைத் திருப்பவேண்டும் என 3 நாட்களுக்கு முன்புவரை திட்டமிட்டிருந்தேன். நாம் எத்தகைய ஆயுதத்தை ஏந்தவேண்டும் என்பதை நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்” என பேச்சைத் தொடங்கினார்.
“தி.மு.க-வில் இருந்து நச்சு ஓலை தயாரிக்கப்பட்டு, ம.தி.மு.க நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். அதை நானும் படித்தேன். அதில், ‘கட்சியை சுடுகாட்டுக்குக் கொண்டு சேர்த்துவிடுவேன்’ என எழுதியிருக்கிறார்கள். ம.தி.மு.க தொண்டனிடம் இருந்து இதுபோன்ற எழுத்துகள் வராது. ஒரு குற்றத்தை வாடிக்கையாகச் செய்பவர், அதே மாதிரிதான் அடுத்த குற்றத்தையும் செய்வார். தடயங்களைவைத்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். 1991-ம் ஆண்டு நவம்பர் முதல் வாரம் என்னையும், என் தம்பியையும் பற்றி தவறான கடிதம் எழுதி இதேபோன்று அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருந்தார்கள். கடிதம் அனுப்பியது தலைவரும், தலைவரின் மகனும்தான் என அப்போதே நான் சொன்னேன். செயற்குழுவில் எனக்கு எதிராய் ஒன்றரை மணி நேரம் பேசினார். நான் 37 நிமிடங்கள் அதற்குப் பதிலளித்தேன். மொத்த செயற்குழுவும் என் பக்கம் நின்றது. அதன்பின்னர் 2004-க்குப் பின்னர் போட்டி ம.தி.மு.க-வை ஆரம்பித்து தாயகத்தைக் கைப்பற்ற கலைஞர் நினைத்தார். அதிலும் தோற்றுப்போனார். அதைத்தான் இப்போதும் அவர் செய்திருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் தி.மு.க-வுடன் கூட்டணி சேர வேண்டும்? ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் கலைஞர் என்னிடம் போனில் பேசினார். ‘பேரனுக்குத் திருமணம். ஸ்டாலின் வந்து அழைப்பிதழ் தருவார். கட்டாயம் வர வேண்டும்’ என்றார். ஸ்டாலின் வந்தார். அழைப்பிதழ் கொடுத்தார். கல்யாணத்துக்குச் சென்றேன். பேசினேன்.ஆனால் அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கக் கட்டடம் ம.தி.மு.க-வின் சொத்து. மோசடியாக கையெழுத்துப் போட்டு அதை தி.மு.க-வினர் அபகரித்துக்கொண்டனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதில் நாங்கள் வென்றோம். கல்யாண வீட்டுக்குப்போன அந்த நேரத்தில்தான், உயர் நீதிமன்றத்தில் அதற்குத் தடைபெற்றார்கள். இதற்குப் பிறகும் தி.மு.க-வோடு கூட்டுவைக்க வேண்டும் என்றால் எப்படி? தி.மு.க., அ.தி.மு..க. செய்யும் ஊழல்கள், தவறுகள், குடும்ப அரசியல், 2ஜி இவை எல்லாம் மிகப் பெரிய ஊழல்கள். பாலோடு கலக்கும் விஷம் மொத்தப் பாலையும் விஷமாக்கும். இந்த பழிபாவத்துக்கு நாம் ஆளாகும்போது, அது, திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எளிதாகிவிடும். 
22 ஆண்டுகளாக என்னோடு நகமும் சதையுமாக இருந்தவர் பாலவாக்கம் சோமு. அவர் ஏன் தி.மு.க-வில் சேர்ந்தார்? நான் யோசித்துப் பார்த்தேன். மக்கள் நல கூட்டியக்கம் என அறிவித்த நாளில் இருந்து ம.தி.மு.க-வை எப்படி உடைப்பது என தி.மு.க. தலைமை திட்டமிட்டது. பலரை அணுகினார்கள். மகாபாரதத்தில் அரவான் பலியானதுபோல, தன்னைத்தானே பலியிட்டு கட்சியைக் காப்பாற்றி இருக்கிறார் பாலவாக்கம் சோமு. நம் கட்சியை அழிக்க தி.மு.க மீண்டும் முயற்சிக்கிறது என்பதை நம் கட்சியினருக்கு உணர்த்த இந்தத் தியாகத்தை பாலவாக்கம் சோமு செய்திருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.
அ.தி.மு.க-வையும் கடுமையாக எதிர்க்கிறோம். வரலாறு காணாத ஊழல். 16 ஆயிரம் கோடி கிரானைட் ஊழல். புராணத்தில் அரிச்சந்திரன் போல, சகாயம் மயானத்தில் படுத்திருக்கிறார். தமிழகம் ஊழல் சாம்ராஜ்யம் ஆகிவிட்டது. ஈவு, இரக்கம், பச்சாதாபம் என எதுவும் இல்லாதவர் ஜெயலலிதா. அம்மா என அழைக்க அடிப்படை தகுதிகூட இல்லாதவர். தி.மு.க., அ.தி.மு.க என இரு கட்சிகளும் தமிழகத்தை நாசம் செய்துவிட்டன. இந்துத்துவா கூடாரமாக அ.தி.மு.க மாறிவிட்டது. இந்துத்துவா கூடாரமாக தி.மு.க மாறிவருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் அவர்களின் பழிபாவங்களுக்கு நாமும் ஆளாக நேரிடும். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க உறுதியாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்கள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூட்டணி வெற்றி பெறும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த அணிக்கு வரலாம். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இப்போது அறிவிக்கப் போவதில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின் அறிவிப்போம். தமிழக அரசியலை சரியான திசையில் ம.தி.மு.க எடுத்துச் செல்லும்” என பேசிவிட்டு அமர்ந்தார் வைகோ.
பல்லடத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த சமயத்தில், தி.மு.க கூட்டணியை உடைக்க நினைப்பவர்கள் உடைந்துபோவார்கள் என சென்னையில் பேசிக்கொண்டிருந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
தேர்தல் சுவாரஸ்யங்கள் ஸ்டார்ட்ஸ்!
– ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய் (நன்றி விகடன்) 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com