சற்று முன்
Home / செய்திகள் / நீராவியடி விவகாரம் பற்றி நாம் கூடி ஆராய்ந்து அர்த்தமுள்ள முடிவெடுப்போம்: மாவை…

நீராவியடி விவகாரம் பற்றி நாம் கூடி ஆராய்ந்து அர்த்தமுள்ள முடிவெடுப்போம்: மாவை…

நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக்கத்தை குழி தோண்டி புதைப்பதாகும். அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸாரும் துணை நின்றுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காது இருப்பதற்கு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துமீறி இடம்பெற்று வரும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது பாராட்டத்தக்கது. அத்தகையவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த குரு தமக்குரியது என்று கூறி விகாரை அமைத்தமை தொடர்பில் ஏற்கனவே நீதி மன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருகிறது. பௌத்த மதகுருவின் உடலை எரிப்பதற்கு நீதிமன்றக் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதனை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மத குருவின் உடலை எரித்தது மட்டுமன்றி, நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்த சட்டத்தரணிகள் பொலிஸாரிடம் கோரிய நிலையில் பொலிஸார் முன்னிலையிலேயே சட்டத்தரணியும் இளைஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சம்வமானது இன மத நல்லிணக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது இதற்கு எதிராக நாங்கள் ஒன்றுகூடி அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் கலந்துரையாடி அர்த்தமுள்ள முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த ஞானசார தேரர் தன் குழுவுடன் இணைந்து இந்தக் குற்றச் செயலை மீண்டும் செய்துள்ளார். சிறைவாசம் அனுபவித்த தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

இந்த நிலையில் மீளவும் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கு ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார் என்பதை நாங்கள் மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இத்தகைய இன மத விரேத செயற்பாடுகள் இந்து மத கோவில்களை ஆக்கிரமித்து புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் கட்டுவது தொடர்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பௌத்தகுருமார் அத்துமீறிச் செயற்படுவதை நிறுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஏனைய மத நடவடிக்கைகளுக்கும் இந்து தலங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் நீதி கிடைக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வற்புறுத்துகின்றோம் என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com