சற்று முன்
Home / செய்திகள் / நீராவியடியில் சட்டத்தரணி மீது தாக்குதல் – அனைத்து ஊடகங்களிடமும் வீடியோ பதிவைப் பெற பொலிஸாருக்கு நீதிமன்று அனுமதி

நீராவியடியில் சட்டத்தரணி மீது தாக்குதல் – அனைத்து ஊடகங்களிடமும் வீடியோ பதிவைப் பெற பொலிஸாருக்கு நீதிமன்று அனுமதி

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய காணொலிகள் மற்றும் ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அனைத்து ஊடகங்களிடமிருந்தும் காணொலி மற்றும் ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கக் கோரி முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார், அதற்கான அனுமதிக் கட்டளையை பொலிஸாருக்கு வழங்கினார்.

நீதிமன்றின் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அடையாளம் காட்டுவதற்காக சட்டத்தரணிகள் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அதன்போது சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மற்றும் மூவர் பௌத்த பிக்குவால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பில் அன்றைய தினமே சட்டத்தரணி கே.சுகாஷ், முல்லைத்தீவு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் சட்டத்தரணி சுகாஷ் மீதான தாக்குதல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தனியாக பி அறிக்கை ஒன்றை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

தாக்குதல் நடத்தியவர்களை மன்றில் முற்படுத்தினால் அவர்களை அடையாளம் காட்டத்தயார் என சட்டத்தரணிகளால் மன்றுரைக்கப்பட்டது.

சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் உள்ளன, அவற்றை வைத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவோம் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

அதனால் வழக்கு விசாரணை வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com