சற்று முன்
Home / செய்திகள் / நீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது! – தமிழ் மக்கள் பேரவை

நீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது! – தமிழ் மக்கள் பேரவை

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலுக்கு இறுதிக் கிரியைகளை முன்னெடுத்து தகனம் செய்யும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பேரவையின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகள் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்பாடானது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இந்து ஆலயங்களையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் புனித பிரதேசமாக தமிழர்கள் பராமரித்து பயன்படுத்திவரும் நிலையில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திலேயே வைத்து இறுதிக் கிரியைகளை செய்ய முற்படுவதானது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயற்பாடாகமட்டுமன்றி, அமைதியற்ற சூழலுக்கான வழியேற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஆகவே, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாகவும், மரபுரிமைச் சொத்தாகவும் திகழ்ந்துவரும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயல்பு நிலையை சீர்குலைக்காத வகையில் இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கையாள வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை அக்கறையுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது – என்றுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com