இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று (22) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் அவர்களது வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல் நிலை விரைவில் தேரவும் நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டுவர வேண்டும் எனவும், இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதனை நாம் கடுமையாக கண்டிக்கும் அதேவேளை யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவதில் பயன் காணக்கூடியவர்கள் இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.

இந்தநிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com