சற்று முன்
Home / செய்திகள் / நீதிமன்றத் தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி

நீதிமன்றத் தீர்ப்பு எதுவானாலும் ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், வலுவான ஜனநாயக முறைமையுள்ள நாட்டில் அவ்வாறு இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த ஜனாதிபதி, வெகுவிரைவில் இந்த நிலைமை மாற்றமடைந்து பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பிரதமர் மற்றும் அமைச்சரவை இன்றி செயற்படும் நாட்டில் ஜனாதிபதி என்ற வகையில் கடந்த சில தினங்களாக தான் மிகுந்த பொறுப்புடனும் பொறுமையுடனும் செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை அரசியல் கட்சிகளுக்கிடையிலான பிரச்சினையாகவும் தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான பிரச்சினையாகவும் விவரிக்க பலரும் முயற்சித்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த பிரச்சினை சுதேச சிந்தனைக்கும் வெளிநாட்டு சிந்தனைக்குமிடையிலான மோதல் ஆகும் எனத் தெரிவித்ததோடு, அந்நிய தேச சக்திகளுக்கு கீழ்படியாமல் சுயமாக எழுச்சி பெற முயலும்போது அந்நிய தேச சக்திகள் அதற்கு சவாலாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, மக்களும் நாட்டின் நன்மை கருதி சரியான முடிவுகளை எடுப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த வெள்ளிக்கிழமை (07) நிறைவடைந்ததோடு, அது தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கலைப்பு தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பான இடைக்காலத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்குவதற்காக பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

294 மில்லியன் ரூபா செலவில் 4500 பயனாளிகளுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் இந்நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com