நில மீட்புப் போர் தொடரும் – வலி வடக்கு மக்கள்

தமது சொந்த நிலத்தினை மீட்பதற்காக   போராடப்போவதாக தெரிவித்துள்ள வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் மக்கள் தமது போராட்டம் வன்முறை சார் போராட்டமாக அல்லாமல் அஹிம்சை ரீதியான போராட்டமாக இருக்கும் என தெரிவித்து்ள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 38 நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை சபாபதிப்பிள்ளை முகாமில் ஒன்று கூடி கலந்துரையாடினார்கள்.
இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது,
அரசியல் வாதிகள் எம் மீது ஏறி நின்று அரசியல் செய்து தமது அரசியல் சுயலாபத்தை அடைகின்றார்கள். இனியும் அவர்களை நம்பிக்கொண்டு இருப்பதனால் எமக்கு எந்த பயனும் கிடைக்க போவதில்லை எமக்காக நாமே போராடுவோம்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மற்றும் மக்கள் கருத்தறியும் கூட்டம் ஆகியவறில் முதலில் மீள் குடியேற்றம் அதன் பின்னரே விமான நிலைய விஸ்தரிப்பு,  துறைமுக அபிவிருத்தி , என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் இணைந்து மக்களால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த  நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சர் மக்களின் எதிர்ப்பையும் மீறி பலாலி விமான நிலைய விஸ்தரிப்ப மேற்கொள்ள போவதாக தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி டிசம்பர் மாதம் ஆறு மாத காலத்திற்குள் அனைவரையும் மீள் குடியேற்றுவேன் என உறுதி அளித்து உள்ளார். இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிலான ஆட்சி நடைபெற்று வருவதனால் நாம் முழுமையாக ஜனாதிபதியை நம்புகின்றோம். 
தற்போது சர்வதேச நாடுகள் முதல் தென்னிலங்கை வரையில் அனைவரினது பார்வையும் எம் மீதே உள்ளது. அதனாலயே யாழ்ப்பாணத்திற்கு எவர் விஜயம் மேற்கொண்டாலும் நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொள்கின்றனர்.
கடந்த 26 வருடங்களுக்கு மேலாக நாம் பல்வேறுவகையான போராடங்களை பல வடிவங்களில் முன்னெடுத்தும் நாம் இன்னமும் எமது சொந்த நிலங்களுக்கு செல்லவில்லை.
எமது நிலம், எமது வளம், எமது தொழில், எமக்கு வேண்டும். அரசியல் வாதிகள் எம்மை வைத்தே அரசியல் சுய லாபங்களை பெற்று வருகின்றார்கள்.
கடந்த கால அரசாங்கங்கள் எமது பிரச்சனைகளை செவிமடுக்கவில்லை. ஆனால் தற்போது உள்ள நல்லாட்சி அரசாங்கம் எமது பிராச்சனைகளை கேட்டறிகின்றது. அதனாலையே ஜனாதிபதி நேரடியாக எமது முகாம்களுக்கு வந்து எமது மக்களை சந்தித்து சென்றுள்ளார்.
தமிழ் கட்சிகள் அனைத்தும்  ஒன்றிணைந்து  எமக்காக  குரல் கொடுக்க வேண்டும் அதனை விடுத்து நான் எவ்வளவு செய்தேன் நீ  இவ்வளவு  தான் செய்தாய் என தமக்குள்ள பிளவு பட்டு  மோதலில் ஈடுபடாமல் எமக்காக  அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எம்மை எமது சொந்த மண்ணில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரை எம்மை எமது சொந்த இடத்தில் மீள் குடியேற்றவில்லை.
அதனால் நாம் இனி எவரையும் நம்பி இருக்க போவதில்லை எமக்காக நாம் போராட போகின்றோம். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 38 நலன்புரி நிலையங்கள் வசிக்கும் மக்கள் ஆகிய நாம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபடபோகின்றோம்.
ஒரு முகாமில் ஒரு கிழமை என ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு கிழமை அந்த அந்த முகாம் மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம்.
நாம் ஜனாதிபதியை தொடந்து நம்பிக்கொண்டு இருப்பதனால்  ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோக பூர்வமாக போராட்டத்தை கைவிடுமாறு கோரினால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம்.
எமது போராட்டம் 38  முகாம்களிலும் முன்னெடுக்கப்பட்டும்  நாம் எமது சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாது போனால் நாம் அணைந்து முகாம் மக்களையும் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வெள்ளைக்கொடியுடன் எமது நிலத்தை நோக்கி செல்வோம்.
 எமது போராட்டங்களை வன்முறை சார் போராட்டங்களாக மாற்றாமல் அஹிம்சை ரீதியாக போராடி எமது சொந்த இடங்களுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
எமது சொந்த நிலத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்ற எமது போராட்டத்திற்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் , பொது அமைப்புக்கள் , வர்த்தக சங்கங்கள் ,சமூக அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com