நிபந்தனைகளை நிறைவேற்றினாலே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை – ஐரோப்பிய ஒன்றிய இலங்கை தூதர் தெரிவிப்பு

ஐ. நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட உத்தவாதம், பயங்கரவாத தடை சட்ட நீக்கம், காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், நல்லிணக்க பொறி முறைகளுக்கான செயலணியின் அறிக்கையை அமலாக்குதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முன்னேற்ற நடவடிக்கைகளை பொறுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற அவர்களுடைய நிலைப்பாட்டை ஐரோப்பிய ஓன்றியத்தின் இலங்கைக்கான தூதர் தன்னிடம் தெரிவித்ததாக தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்   மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை முழுமையாக பெறுவதற்கு இலங்கை இன்னும் பல கட்டங்களை தாண்டவேண்டியுள்ளது என்ற நிலைப்பாட்டிலே ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) திங்கட்கிழமை இலங்கைக்கான ஐரோப்பிய ஓன்றிய தூதர் டுங் லை மார்க் மற்றும் அதன் கருத்தறியும் குழுவிற்கும், இலங்கை அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் அவருடைய அமைச்சரகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.பி. வரிச்சலுகை அதாவது 66 சதவீத வரி விலக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது.
இந்த சலுகை முந்தைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நீக்கப்பட்டது. இந்த சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்கலாம் என ஐரோப்பிய ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்துள்ளது .

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், “ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு வெளியாக சுமார் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com