நினைவு கூர்தல் – 2016 நிலாந்தன்

MAY-18-UNI-600x338

இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவிலலை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண்டர்கள் குறிப்பிட்ட ஒரிடத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். பிரமுகர்களும் விளக்கையேற்றி அதைப் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அல்லது தமது சொந்த முகநூல் பக்கத்தில் அதைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
இப்படியாக அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கேற்றும் போது அந்த நிகழ்வில் பொதுமக்களை எந்தளவிற்குப் பங்காளியாக்கலாம் என்பது பற்றி குறைந்தளவே சிந்தித்திருப்பதாகத் தெரிகிறது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இடங்களைத் தெரிவு செய்து விளக்கேற்றும் பொழுது அங்கு அப்படுகொலையில் இருந்து தப்பியவர்களையோ அல்லது அப்படுகொலையின் சாட்சிகளையோ கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையோ நண்பர்களையோ அழைத்திருந்திருக்கலாம். இந்த இடத்தில் விளக்கேற்றப் போகிறோம் என்பதை உள்;ர் சிவில் அமைப்புக்களுக்கூடாக முன்கூட்டியே அறிவித்திருந்தால் பொதுமக்களைத் திரட்டியிருந்திருக்கலாம். ஆனால் இங்கு பிரச்சினை எதுவெனில் விளக்கேற்றியதற்கான பாராட்டை யார் பெறுவது என்ற போட்டியுணர்வுதான். இப்போட்டி காரணமாக பரவலாக விளக்கேற்றப்பட்டது. ஆனால் குறைந்தளவே பொதுமக்கள் இவற்றில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
வவுனியா பிரஜைகள் குழுதான் தொடக்கத்திலேயே நினைவு கூர்தலுக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மே 18ஐ கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறும், முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக சங்கத்தை நிகழ்வில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தது. முல்;லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கடையடைப்பு இடம்பெற்றது. ஏனைய எல்லா தமிழ் மாவட்டங்களிலும் வாழ்க்கை வழமைபோல நகர்ந்தது. ஏனைய மாவட்டங்களில் ஏன் கடையடைப்பு நடக்கவில்லை? என்று கேட்டபோது வர்த்தக சங்கங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மே 18 இற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும்தான் கடையடைப்புச் செய்யவேண்டுமா? அது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மட்டுமேயான ஓர் இழப்பா?
முள்ளிவாய்க்கால் எனப்படுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அது இப்பொழுது அது ஒரு புவியியல் வார்த்தை அல்ல. அது ஒரு அரசியல் பதம். அது ஒரு குறியீடு. அது ஒரு யுக முடிவின் இடம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஒராயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இடம். மக்கள் எனப்படும் நீரி;ல் இருந்து ஆயுதப் போராளிகள் எனப்படும் மீன்களை வடித்தெடுப்பதற்காக இறைச்சிக்கடையாக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர் அது. ஈழத்தமிழர்களின் கூட்டுத் துக்கத்தின் குறியீடு அது. கூட்டு காயங்களின் குறியீடு. கூட்டு மனவடுக்களின் குறியீடு. அது இப்பொழுது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமான பெயர் அல்ல. அது முழு ஈழத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு பெயர். எனவே துக்கம் அனுஸ்டிப்பதாக இருந்தாலும் சரி கடையடைப்பு செய்வதாக இருந்தாலும் சரி அதில் தாயகத்தில் உள்ள சகல மாவட்டங்களும் பங்கேற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்?
வடமாகாண சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருமளவிற்கு அரசியல்வாதிகளே பங்குபற்றியிருக்கிறார்கள். ஏறக்குறைய 200 இற்கும் குறையாத தொகையினர் பங்கு பற்றிய அந்நிகழ்வில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அரசியல்வாதிகள் என்றும் 30 வீதத்தினர் ஊடகவியலாளர்கள் என்றும் கணக்கிடப்படுகிறது, ஒப்பீட்டளவில் குறைந்தளவு பொதுமக்களும், சிறிதளவு மதகுருக்களும் பங்குபற்றியிருக்கிறார்கள். தமிழ் தேசிய முன்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மத அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். மன்னாரிலும், கிளிநொச்சியிலும் ஓரளவுக்குப் பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் பிறநாட்டு ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்திருக்கிறார்கள். இம்முறை யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திலும் விளக்கேற்றப்பட்டிருக்கிறது.தமக்கு வாக்களித்த மக்களின் கூட்டு உளவியலை கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு தேவை வடக்கில் உள்ள ருNP பிரதானிகளுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதானிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் தலைவருக்கு?
கிழக்கிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அங்கேயும் பங்குபற்றிய பொதுமக்களின் எண்ணிக்கையை நூற்றுக்கணக்கானது என்று சொல்ல முடியாது.
யாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்லைக்கழகத்திலும் மாணவர்கள் தனியாக துக்கம் அனுஸ்டித்திருக்கிறார்கள்.மே 18ஆம் திகதி நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளோடும் ஒப்பிடுமிடத்து யாழ். பல்கலைக்கழகத்தில்தான் கூடுதலான தொகையினர் பங்குபற்றியிருக்கிறார்கள். மக்கள் போராட்டங்களின் கூர்முனை என்று வர்ணிக்கப்படுவது மாணவர் சக்தியாகும். ஆனால் தமது வணக்க நிகழ்வுகளில் பல்கலைக்கழகங்களையும்; பங்காளியாக்க எந்தவொரு கட்சியாலும் முடியாமல் போயிற்று.
இவ்வாறாக வடக்குக் கிழக்கு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நினைவு கூர் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்தைத் தாண்டாது என்று கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால் நந்திக்கடலின் மறுகரையில் அமைந்திருக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் இன்றும் நாளையும் உற்சவம். அதில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடப் போகிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான கணக்கில்லை. இதில் ஐ.நா.வின் ஒரு கணக்கின்படி சுமார் 40 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயின் இவர்களுடைய உற்றார் உறவினர் நண்பர்களில் எத்தனை விகிதமானவர்கள்; மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுசன நிகழ்வாக அது ஒழுங்குசெய்யப்படாததற்கு யார் பொறுப்பு? அவரவர் தன்னியல்பாக புறப்பட்டுவருவார்கள் என்று இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. உள்ளுறையும் அச்சம் இப்பொழுதும் உண்டு. கண்காணிக்கப்படுகிறோம் என்ற பயப்பிராந்தி இப்பொழுதும் உண்டு. இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நிகழ்வுகளிலும் படைப்புலனாய்வுத் துறையினர் சிவில் உடையில் பிரசன்னமாகி இருந்ததாக ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்குரிய ஒரு உளவியல் தயாரிப்பை ஏதாவது ஒரு கட்சியோ அல்லது பொது அமைப்போ செய்யவேண்டியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் எனப்படுவது வன்னி கிழக்கில் ஒரு தொங்கல். ஏனைய மாவட்டங்களில் இருந்து அங்கு போவது என்றால் அதற்கொரு செலவு உண்டு. வழமையாக அரசியல் போராட்டங்களுக்காக பொதுமக்களை அணிதிரட்டும் பொழுது பயணச் செலவு சாப்பாட்டுச் செலவு தங்குமிடச் செலவு போன்ற செலவுகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மக்களைத் வருவிக்கும் பொழுது அதற்கென்று ஒரு வரவுசெலவுத்திட்டம் உண்டு. சாதாரணமாக வவுனியாவில் இருந்தோ அல்லது மன்னாரில் இருந்தோ யாழ்ப்பாணத்திற்கு பங்குபற்றுநர்களை அழைத்து வருவதாக இருந்தால் பயணச் செலவு மட்டும் ஒரு பேருந்திற்கு 20 ஆயிரத்திற்கும் குறையாமல் வரும். ஒரு பேருந்தில் குறைந்தது 40 பேர்வரை பயணிக்கலாம். இவர்களுக்கான உணவு மற்றும், தேநீர் செலவுகள் என்பவற்றைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் குறையாது. குறைந்தது 40 பேருக்கு இவ்வளவு செலவென்றால் நூற்றுக்கணக்கில்; ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்று திரட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்?

ஆட்சி மாற்றதிற்கு முன்பு வடக்கில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களின்போது அவற்றில் பங்குபற்றுவதற்காக ஏனைய மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கான பயணச் செலவை சில அரசசார்பற்ற நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு தூதரகங்களோ வழங்கியதாக ஒரு தகவல் உண்டு. மக்கள் போராட்டம் எனப்படுவது தனிய உணர்வுபூர்வமானது மட்டுமல்ல. அதற்கென்று ஒரு செலவுண்டு. அதற்கென்று ஒரு நிதி அடித்தளம் வேண்டும். அவ்வாறான ஒரு நிதி அடித்தளத்தை கட்டி எழுப்புவதென்றால் அதற்கு முதலில் இது போன்ற போராட்டங்களுக்கென்று ஒரு பொது ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட வேண்டும். அதாவது வெகுசன அரசியலைக் குறித்த ஓர் ஆழமான தரிசனம் வேண்டும்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்த நிலையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகளில் பொதுசனங்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்தமைக்கு பெருமளவு பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்க வேண்டும். உள்ளுறையும் அச்சம் ஒரு காரணம்தான் என்றாலும் நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் வெகுசனப் போராட்டங்கள் அல்லது வெகுசன நிகழ்வுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும், எந்தவொரு தமிழ் சிவில் அமைப்பிடமும் சரியான தரிசனம் இல்லை எனலாம். இதில் வயதால் இளையதும் ஆகப் பிந்திய அமைப்புமாகிய தமிழ் மக்கள் பேரவையும் தன்னிடம் அப்படிப்பட்ட வெகுசன அரசியலுக்கான தரிசனம் எதுவும் இருப்பதாக இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.
நினைவு கூர்தலை ஓர் ஒத்தியோகபூர்வ நிகழ்வாக ஒழுங்குபடுத்தியிருந்த மாகாணசபையும் அதை ஓர் மக்கள்மயப்பட்ட நிகழ்வாக ஒழுங்குபடுத்துவதற்குரிய எந்தவொரு ஏற்பாட்டையம் செய்திருக்கவில்லை. குறைந்தபட்சம் மாகாணசபையின் கட்டுப்பாட்டிலிருக்கும் பாடசாலைகளிலாவது காலை வணக்க நிகழ்வுகளின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்;;;;சலி செலுத்தியிருந்திருக்கலாம். அதைப்பற்றிக் கூட வடமாகாணசபையின் கல்வி அமைச்சு சிந்தித்திருக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தனது முகநூல் குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
வடமாகாண அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சின் கீழ் வரும் விழாக்களை வெக விமரிசையாக ஒழுங்கு செய்வதுண்டு. அவ்வாறு பெருமெடுப்பிலான விழாக்களை ஒழுங்கு செய்யத் தேவையான அனுபவமும் ஆற்றலும் மிக்க அமைச்சர்கள் வடமாகாணசபையிடம் உண்டு. இது விடயத்தில் வடமாகணசபை தன்னுடைய வளங்களை ஏன் பிரயோகிக்க முடியாது போயிற்று?
நினைவு கூர்தலை ஒரு வெகுசன நிகழ்வாக திட்டமிடுவதென்றால் அதற்கு கட்சிசாரா பொதுக்குழு ஒன்றை உருவாக்கியிருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் பேரவையாவது அதுபற்றி சிந்தித்திருக்கலாம். இதுதொடர்பில் ஒரு கூர்மையான அவதானி பின்வருமாறு ஆலோசனை தெரிவித்திருந்தார். “ஈழப்போரில் முதலில் கொல்லப்பட்ட தமிழ் பொதுமகன் எங்கு கொல்லப்பட்டாரோ அங்கு முதலில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் அந்தத் தீபத்தைச் ஏந்திச் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலில் பெரும் தீபம் ஒன்றை ஏற்றியிருந்திருக்கலாம்”என்று. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அப்படி எதையும் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கம் இது விடயத்தில் தனது பிடியை ஓரளவுக்குத் தளர்த்தியிருந்த ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தின் விரிவை பரிசோதிக்கக் கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்க்கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் தவறவிட்டுவிட்டனவா?

இம்முறை ஒப்பீட்டளவில் பரவலாகவும் செறிவாகவும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனாலும் தொகுத்துப் பார்த்தால் அது ஒரு வெற்றிகரமான வெகுசன நிகழ்வாக இருக்கவில்லை. கூடிய பட்சம் அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் குறியீட்டு நிகழ்வாகவும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு நிகழ்வாகவும் காணப்பட்டது. அது எப்பபொழுது ஒரு வெகுசன நிகழ்வாக மாறும்? அதை அவ்வாறு திட்டமிடுவதற்குரிய தரிசனமுடைய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் யாருண்டு?

3 comments

 1. Ahaa, its fastidious conversation regarding this post here at this blog, I have read
  all that, so at this time me also commenting here.

 2. I will immediately take hold of your rss as I can not in finding your e-mail subscription hyperlink or newsletter service.
  Do you’ve any? Please let me realize so that I may subscribe.

  Thanks.

 3. It is perfect time to make some plans for the future and it’s time to be happy.
  I’ve read this post and if I could I desire to suggest you some interesting things or suggestions.
  Perhaps you can write next articles referring
  to this article. I wish to read more things about
  it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com