நினைவுகூரல்: கூட்டாக மீண்டெழுவதற்கான அரசியல் வெளியை சாத்தியப்படுத்துவதற்கான முக்கிய படிக்கல்

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் குறித்து தமிழ் சிவில் சமூகம் விடுத்துள்ள அறிக்கை
1475982_10153490180570251_717459240_n
தமிழ் மக்களுக்கெதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று இவ்வாரத்துடன் 7 வருடங்கள் ஆகின்றன.
முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் குற்றங்களுக்கு நீதியை கண்டறியும் போராட்டம் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது என்பதே யதார்த்தம். தொடர்ந்து குற்றங்கள் தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வருவதும் குறைந்தபாடில்லை. கைதுகளும், வன்முறைகளும், நிலப்பறிப்புக்களும் தொடர்ந்து வருகின்றன. இராணுவமயமாக்கலும் தொடர்கின்றது. எமக்காக ஆயுதம் தாங்கி போராடியவர்கள் மீதான அரசின் வன்முறை தொடர்கின்றது. வெட்கி தலை குனிய வேண்டிய அளவிற்கு சமூகமாக நாம் எமது போராளிகளை அரவணைக்கவும் தவறி இருக்கிறோம்.
நினைவுகூரலின் பணிகளில் ஒன்று ஒரு தேசமாக நாம் மீண்டெழுதலை சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் வெளிக்கான புத்துணர்வை வழங்குவதாகும். இவ்வாரத்தை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கும் வேளையில் நாம் எமக்கு முன்னிருக்கும் பணியை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். பொறுப்புக்கூறல் தொடர்பான விஷயத்தில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள தேக்கநிலையை உணர்ந்து நீதிக்கான ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும். அப்போராட்டத்தில் நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டியது ஓர் சமூகமாக நாம் எமக்கெதிரான இழைக்கப்பட்ட குற்றங்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடதல். மேலும் போராளிகளதும் அவர்களது குடும்பங்களினதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கும் மறுவாழ்வுக்கும் முழுமையான சமூக ஒருங்கிணைப்பிற்கும் தேவையான சமூகத் திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். அத்தோடு எமது சுயநிர்ணய அரசியலை தக்க வைப்பதற்கான அரசியல் தகைமை விருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் பொதுவாக சொன்னால் தமிழ்த் தேசிய உட்கட்டமைப்பு புனருத்தாரண வேலைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய காலப் பகுதி இது. இம்முயற்சிகளில் எல்லோரும் கைகோர்க்க தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு விடுக்கின்றது.
எமக்காக மரணித்தவர்களை, படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் இந்த வேளையில் அவர்களது நம்பிக்கைகளை நாம் எமதாக வரித்துக் கொள்ள வேண்டும். அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும், கூட்டாகவும் எமது நீண்ட போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இவ்வாரத்தில் நினைவுகூருவோமாக.
நன்றி.
குமாரவடிவேல் குருபரன் & எழில் ராஜன்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com