சற்று முன்
Home / செய்திகள் / நாவற்குழியில் 24 இளைஞர்களை இராணுவம் கைது செய்து காணாமலாக்கியமை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

நாவற்குழியில் 24 இளைஞர்களை இராணுவம் கைது செய்து காணாமலாக்கியமை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை. எனவே ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும். என மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார்.

நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

அதன் போது, மனு தாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான வி.திருக்குமரன் மற்றும் சுபாஜினி கிசோர் ஆகியோரும் எதிர் மனுதாரர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் ஆகியோர் முன்னிலையானர்கள்

அதனை தொடர்ந்து மனு மீதான விசாரணைகளை மேற்கொள்ளாமல் அதனை தள்ளுபடி செய்யுமாறு கோரி பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார்.

குறித்த ஆட்சேபனையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

குறித்த சம்பவம் கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மிக நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் கடந்த 22 வருடங்களுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துகொள்ள கூடாது.

காணாமல் ஆக்கப்பட்டு உள்ளார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் தான் இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கான சான்றுகள் சாட்சியங்கள் எவையும் இல்லை. அத்துடன் கைது செய்யப்பட்ட இடம் நாவற்குழி என குறிப்பிடப்பட்டு உள்ள போதிலும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு உள்ள இடம் என எதனையும் குறிப்பிடவில்லை.

மற்றும் இந்த மனுவில் இணைக்கப்பட்டு உள்ள ஆவணங்களில் ஒன்றான சாவகச்சேரி பிரதேச செயலாளராக அக்கால பகுதியில் சேவையில் இருந்த சுந்தரம்பிள்ளை என்பவர் வழங்கிய ஆவணம் மோசடியான ஆவணம் என தெரிய வந்துள்ளது. என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை கடந்த தவணையின் போது பிரதி மன்றாடியார் அதிபதி , மனுவில் இணைக்கப்பட்டு உள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவின் ஆவணம் பொய்யானது, மோசடியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து இருந்த்த நிலையில் இன்றைய தவணையின் போது சாவகச்சேரி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட ஆவணம் பொய்யானது மோசடியாக தயாரிக்கப்பட்டது என குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேலும் ஐந்து ஆட்சேபனைகளை மன்றில் தெரிவித்து குறித்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கால தாமதம் என்பதற்கான ஆட்சேபனைக்கு திருகோணமலை ஜெகதீஸ்வர சர்மா வழக்கை கோடிட்டு காட்டி காலதாமதம் எனும் ஆட்சேபனையை நிராகரித்தார்.

அதனை தொடர்ந்து மனுதாரர்கள் சட்டத்தரணிகளின் மறுதலிப்பு ஆட்சேபணைக்கும் , பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பத்தின் மீதான விவாதத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிக்கு திகதியிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com