’நான் சொன்னதில் மாற்றமில்லை. விளக்கம் தேவையில்லை!’ – இயக்குநர் சேரன்

Saran ‘கன்னா பின்னா’ என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் சேரன் பேசிய பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. புதுமுக இயக்குநரான தியாவின் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னதாக பேசிய ஜாகுவார் தங்கம் திருட்டு டிவிடி விற்பவனின் கைகளை உடைப்பேன் என பேசி அரங்கை சூடாக்கினார். அதன் பின்னர் பேச வந்த இயக்குநர் சேரன் முதலில் குழுவினைரை பாராட்டி பேசிவிட்டு இறுதியில் திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியிடுவது குறித்து பேசும்போது

” ‘கபாலி’ போன்ற படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற பட தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும். ஆன்லைனாக இருக்கட்டும்..ஆனால் அது முறையாக இருக்கவேண்டும். திருட்டுத்தனமாக இருக்க கூடாது.. பலரின் உழைப்பையும் தயாரிப்பாளரின் பணத்தையும் சுரண்டும் தீமைக்கு நாம் துணைபோக கூடாது. இது போன்ற படங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்றே கேட்கத்தோன்றுகிறது. தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறது . ஆனால் கண்டுகொள்ளவதில்லை .ஏனெனில் நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. ஏன்.. மத்திய மாநில அரசுகள் கூட இதைப்பற்றி கவலைப்படுவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது.. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.பல்வேறு இடங்களுக்கு சென்று போராடி இருக்கிறோம், பலவற்றை இழந்து போராடியிருக்கிறோம். ஆனால் அதை சார்ந்த சில நண்பர்கள்தான் இதை செய்கிறார்கள் என்கிற போது, ஏண்டா இதையெல்லாம் செய்தோம் என அருவருப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது.” என்றார். இந்தப்பேச்சுக்கு தற்போது கடும் சர்ச்சையாகியுள்ளது. சேரனின் இந்த கருத்துக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ” இந்த விவகாரத்தில் எனக்கு கண்டனம் தெரிவிப்பவர்களெல்லாம் யார் என்றே தெரியவில்லை. என்னை தெரிந்தவர்களுக்கு நான் சொன்ன கருத்து புரியும். இதற்கு விளக்கம், பின்னர் அதற்கு விளக்கம் என்றெல்லாம் போய்க்கொண்டிருக்க விரும்பவில்லை. நான் பேசியது அப்படியே இருக்கட்டும், அது உண்மைதான்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com