நாட்டை விற்க மாட்டேன் – நான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டிக்கு இடமில்லை – ஜனாதிபதி காலியில் சூழுரை

நாங்கள் நாட்டை விற்கப் போகின்றோம் என சிலர் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் நான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘நில மெஹவர’ (உத்தியோகபூர்வ பணி) ஜனாதிபதி மக்கள் சேவையின் காலி மாவட்ட நிறைவு விழா காலி லபுதுவ சிறிதம்ம கல்லூரியில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

காலி மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக 19 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், முன்வைக்கப்பட்ட 1,40,956 பிரச்சினைகளில் 1,37,681 க்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.
மக்களிடமிருந்து எந்தவொரு நிதியையும் அறவிடாது இலவசமாக பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டன. இலவச மருத்துவ மற்றும் கண் மருத்துவ சேவைகள், சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் ஏனைய அரசாங்கக் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள், சுயதொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.


நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
ஆனால், நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாம் இணங்கியுள்ளதாலேயே ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளதாக சில அச்சு ஊடகங்கள் முதற்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தன.
நாட்டின் ஊடகத்துறை இந்தளவு ஒழுக்கமற்று செயற்படுவதை முன்னிட்டு மிகவும் வேதனையடைகிறேன். செய்திகளை வழங்கும்போது சமூகத்திற்கு உண்மையை உரைக்க வேண்டும்.
அதேபோன்று, வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ள நிலையில், நாட்டை விற்கப் போகின்றோம் என சிலர் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். நாட்டில் கடந்த காலங்களில் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் வெளிநாட்டவர்களே அதிகமாக உள்ளனர்.
இதில் எங்காவது நாட்டை விற்பனை செய்துள்ளார்களா? இன்று பலர் குறிப்பிடுவதைப் போன்று இந்நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தவோ நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்” என்றார்.

நேற்று (14) இடம்பெற்ற நடமாடும் சேவையில் இணைந்துகொண்ட ஜனாதிபதி , ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கூடத்தில் இருந்து மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
500 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், லெப்டொப் கணனிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்களும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com