நாட்டைத் திருத்த முன் வீட்டைத் திருத்துங்கள் – முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

CMநாட்டைத் திருத்துவதற்கு முன்னர் வீட்டைத்திருத்த ஒவ்வொரு குடிமகனும் முன்வரல் வேண்டும். நாட்டைத்திருத்துவது கால விரயத்துடன் கூடிய கடினமான பணியாக காணப்படுகின்ற போதிலும் வீட்டைத்திருத்துவது விரைந்து முடிக்கக்கூடிய வேலையாகவே அமைகின்றது எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்  ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளின் ஒழுக்கங்கள், கற்றல் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் கூர்ந்து அவதானிக்கப்படுகின்ற போது வீடு முன்னேறும்; இவ்வாறு வீடுகள் முன்னேற நாடு முன்னேறும்  என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கிறீஸ்து நற்தூது பணியகத்தின்
முத்தமிழ் விழா -2016 நிகழ்வு 06.11.2016 அன்று குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரமு உரையின் முழு வடிவம் வருமாறு,
குருர் ப்ரம்மா ……………………………………..
தலைவர் அருட்பணி டேவிட் நிருஷிகன் அடிகளார் அவர்களே, பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களே, அருட் பணியாளர்களே, அன்புச் சகோதர சகோதரிகளே,
பல வேலைப்பளுக்கள் மத்தியில்த்தான் இன்று உங்களுடன் இந்த விழாவில் கலந்து கொள்கின்றேன். நாளாக நாளாக வேலைப்பளுக்கள் அதிகரித்துக் கொண்டு போகின்றன. உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலை இருந்தாலும் அம்மனோநிலையை நடைமுறைப்படுத்த முடியாமல் பல சிக்கல்கள் எழுகின்றன. என்றாலும் அமெரிக்கன் மிஷன் திருச்சபையுடன் நான் பல வருடங்களுக்கு முன்னரே தொடர்பு வைத்திருந்தேன். மிஷனில் பிரிவுகள் வர முன்னரே மி~ன் அருட் தந்தையர் சார்பில் வழக்குகளில் சட்டத்தரணியாகக் கொழும்பில் தெரிபட்டிருக்கின்றேன். அப்பொழுது வெள்ளவத்தை குரளளநடள டுயநெல் உங்கள் காரியாலயம் இருந்தது. ஆகவே அருட் தந்தையார் அழைத்த போது அமெரிக்கன் மி~னுடன் சம்பந்தப்பட்டதாலும் உங்கள் பணியகம் குடத்தனையில் அமைந்திருப்பதாலும் இப் பகுதிக்கு வர ஆவல் கொண்டிருந்ததாலும் உங்கள் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.
நான் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் 1958ம் ஆண்டில் சமய ஒப்பீடு பற்றிய ஒரு பரிசைப் பெற்றேன். அந்தப் பரிசைப் பெற நான்கு சமயங்கள் பற்றியதுமான அறிவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விடயங்களில் ஒப்பீட்டு முறையில் பதில் அளிக்கவுந் தெரிந்திருக்க வேண்டியிருந்தது. இதனால் பல் சமய அறிவை அப்பொழுதிருந்தே நான் பெறக்கூடியதாக இருந்தது. ஏற்கனவே இவ்விடயத்தில் எனக்கு அக்கறை இருந்தது. 1965ம் ஆண்டில் பல் சமய சம்மேளனம் ஒன்று உருவானபோது அதன் ஆரம்ப உறுப்பினராக நான் இருந்தேன்.
பின்னர் உபசெயலாளராகவும் நியமிக்கப்பட்டேன். குறித்த பல்சமய சம்மேளனம் பற்றிய சட்டம் 1970ம் ஆண்டின் 13வது இலக்கச் சட்டமாய் இன்றும் எமது சட்ட வாக்கங்களில் இருந்து வருகின்றது. ஆனால் நாற்பது ஆரம்ப உறுப்பினர்களிடையே உயிரோடு இருக்கும் ஒரேயொருவர் நான் மட்டுமே என்று நம்புகின்றேன்.
ஆகவே பல்சமய அறிவு பெறல், பல சமயிகளுடனும் உறவாடல் போன்றவை என்னால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நற்செயல்கள் என்று சொல்லலாம். அந்த விதத்தில் உங்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு இறைவனுக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குகின்றார்கள். காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த திருச்சபைகள் கல்வியோடிணைத்து புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை தெற்காசியப் பிரதேசங்களில் பரப்பும் நோக்குடன் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்து ஆங்காங்கே பல பாடசாலைகளையும் கல்விக் கூடங்களையும் நிர்மாணித்ததே. அவர்கள் ஏற்றிவிட்ட கல்விச் சுடரே இன்று பிரகாசமாக ஒளிர்கின்றது. அவர்கள் மாணவர்களுக்கான ஆங்கிலக்கல்வியை கற்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். அதன் விளைவாக இன்று பல அறிஞர்களும் கல்விமான்களும் அரசியல்த் தலைவர்களும் உருவாகியுள்ளார்கள். திருச்சபைகளின் செயற்பாடுகளுக்கு ஒப்பாக இந்து போர்ட் இராஜரட்ணம் போன்றவர்களின் முயற்சிகளின் மூலம் தமிழ் வித்தியா கல்விக் கூடங்களும் சமய அறிவூட்டல் நிலையங்களும் உருவாகியதன் பயனாக எமது அறிஞர்கள் பலர் தாய் மொழியாம் தமிழ் மொழியுடன் ஆங்கிலக்கல்வி, சமய அறிவு என்பவற்றை நிறைவாகப் பெற்றுக் கொண்டு கற்றறிந்த ஒரு குழாமாக உலாவருவது எமக்கு மகிழ்வளிக்கின்றது. எமது வடமாகாணத்தில் சமய ரீதியாக இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் இடையில் சமய நல்லுறவு பேணப்பட்டு வருகின்றது என்பது வெள்ளிடைமலை.
அன்று திருச்சபைகளும் மற்றும் உள்;ர் பிரமுகர்களும் எமது மாணவர்களின் கல்வி, அதனோடிணைந்த சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்திருக்காவிட்டால் நாமும் கல்வி கேள்விகளில் மிகவும் பின்தங்கிய ஒரு சமுதாய கட்டமைப்பின் கீழ் தள்ளப்பட்டிருப்போமோ என்ற ஐயம் தோன்ற வாய்ப்பிருந்தது. எம்மவர்கள் தாம் பெற்ற கல்வியை தமது உடன்பிறப்புக்களுக்கும் நண்பர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்குவதற்கும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் பயன்படுத்தியமையின் விளைவே வடமாகாணத்தில் 85 வீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியறிவைப் பெற்றவர்களாகக் காணப்பட்டனர்.
துர்அதிர்ஸ்ட வசமாக இப்பகுதிகளில் இடம்பெற்ற பாரிய யுத்த நடவடிக்கைகள் அதனோடிணைந்த தாக்கங்கள் எமது இளைய சமூகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. கல்வி கேள்வியறிவுகளிலும் அவர்கள் பின்னிற்க வேண்டிய ஒரு நிலையும் ஏற்பட்டதென்றே தெரிகின்றது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். பாடசாலைப் புத்தகங்களுடன் கண்விழித்துக் கற்க வேண்டிய நேரத்தில் துப்பாக்கிகளுடன் எல்லைப்புறக் கிராமங்களில் கண்விழித்து எம்மைக்காவல் செய்த எம் இளைஞர்கள் இன்று அங்கவீனர்களாக, அல்லல்ப் படுபவர்களாக, நினைவுகூரப்பட வேண்டியவர்களாக, ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருவது ஒரு துர்ப்பாக்கிய நிலையே.
இன்றைய சமூகத்தை, இளைஞர் யுவதிகளை, மாணவர்களை எவ்வாறு காப்பாற்றி ஒரு பண்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது என்பது பற்றியே நாம் தீவிரமாக சிந்தித்து வருகின்றோம். மேடைகளில் ஏறி நின்று வீர முழக்கங்கள் செய்வதோ, ஆளையாள் திட்டித்தீர்ப்பதோ இக் காலகட்டத்திற்கு அவசியமற்றவை. புத்திஜீவிகள், அரசியல்த் தலைவர்கள், பணம் படைத்தவர்கள், அறிவுசார் தலைவர்கள் அனைவரும் அன்று சேர்ந்து எவ்வாறு அமெரிக்க தென்னிந்திய திருச்சபைகள் உங்கள் சமூகத்தை கல்வியில் முன்னேற்றங்காணப் பாடுபட்டனவோ அந்த வகையில் எம் மக்கள் யாவரையும் மீண்டும் ஒரு முறை கல்வி கேள்வி நடவடிக்கைகளில் உயர்ந்தவர்களாக, பண்பட்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும், பின்பற்ற வேண்டும் என்பவை பற்றி ஆரய்ந்து நாம் யாவரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருக்கின்றோம். ஒருவரையொருவர் குறைகாண்பதற்கோ அல்லது தூற்றித்திரிவதற்கோ செலவிடுகின்ற நேரங்களை இவ்வாறான முன்னேற்றகரமான பணிகளை ஆற்றுவதற்கு செலவிடுவதன் மூலம் வருங்கால சந்ததியினரை நாம் சுபீட்சமுடைய ஒரு இனமாக மாற்ற முடியும் என்பது எனது அசையா நம்பிக்கை.
இன்று தேர்தலில் வென்ற ஒருவர் அடுத்த தேர்தலுக்கே தன்னை ஆயத்தப்படுத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். தேர்தல் எக்காலப் பகுதிக்காக நடாத்தப்பட்டதோ அந்தக் காலப்பகுதியில் தாம் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் யாவையும் மறந்து விடப்படுகின்றன. அந்த நிலைமை மாறி மக்களுக்காக நாம் இன்று என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம் எல்லோர் உள்ளத்திலும் பரிணமிக்க வேண்டும்.
உங்களைப் பொறுத்த வரையில் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி நடாத்திக் கொண்டு போவது ஒரு முக்கியமான விடயம் என்று நம்புகின்றேன். அந்த வகையில் முன்னெடுப்புக்கள் பல வழிகளில் கொண்டு செல்லப்படலாம். இன்று மாணவர்கள் வாசிப்புப் பழக்கங்களை முற்றாகத் துறந்துவிட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நூற்றுக்கணக்கான பெறுமதிமிக்க பயன்தரக்கூடிய புத்தகங்கள் நிரம்பியிருந்தன. மாணவ மாணவியர் தமது ஓய்வு நேரங்களில் கற்றல் அல்லது வாசிப்பு வேலைகளிலேயே கூடுதலாக ஈடுபட்டார்கள்.
இன்று நிலைமைகள் அவ்வாறு இல்லை. புத்தகங்கள் இருக்க வேண்டிய வீடுகளில் செல்போன்கள் அடுக்கப்படுகின்றன. கற்றலுக்கு செலவழிக்க வேண்டிய நேரத்துணுக்குகள் முகப்புத்தகங்களில் செலவீடு செய்யப்படுகின்றன. வயது வந்தவர்கள் கூட சம்பா~pப்பதற்குக் கூச்சப்படுகின்ற பல விடயங்கள் இன்று இணைய வலைப்பின்னல்களில் வர்ணப்படங்களுடன் கூடிய செயன்முறை விளக்கங்களுடன் அமைந்திருப்பது சமூகத்தை வேண்டும் என்றே அடுத்துக்கெடுப்பதற்கான ஒரு முன்முயற்சியாகவே தென்படுகின்றது.
பாலியற் கல்வி என்பது பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படக்கூடிய ஒரு விடயமாக ஆராயப்படும் இவ்வேளையில் அவற்றை ஆபாசங்களாக மாற்றி மாணவர்களின் இச்சைகளைத் தூண்டுவதற்கும் அதன் வழி அவர்களை துர் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கும் இந்த இலத்திரனியல் சாதனங்கள் காட்டுகின்ற கரிசனைகள் எம்மை மனவேதனை அடையச் செய்கின்றன.
இன்று வட பகுதியில் அரங்கேற்றப்படுகின்ற வாள்வெட்டு கலாச்சாரம், கொலை, களவு, பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு மூல காரணங்கள் இவ்வாறான நவீன சாதனங்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இந்தத் துர்ப்பழக்க வழக்கங்களை அரங்கேற்றுவது எமது இளைஞர் யுவதிகளே என எண்ணுகின்ற போது தவறு எங்கள் மீது அதாவது பெற்றோர்கள் மீதுதான் இருப்பதாகத் தெரிகின்றது. எமது கவனக் குறைவும் ஒரு முக்கிய காரணமாக அமையலாம்.
நாட்டைத் திருத்துவதற்கு முன்னர் வீட்டைத்திருத்த ஒவ்வொரு குடிமகனும் முன்வரல் வேண்டும். நாட்டைத்திருத்துவது கால விரயத்துடன் கூடிய கடினமான பணியாக காணப்படுகின்ற போதிலும் வீட்டைத்திருத்துவது விரைந்து முடிக்கக்கூடிய வேலையாகவே அமைகின்றது. பாடசாலை செல்லும் எமது இளைஞர் யுவதிகள் என்ன செய்கின்றார்கள், எங்கு செல்கின்றார்கள், எவருடன் சேர்கின்றார்கள் போன்ற விடயங்கள் இனியாவது கண்காணிக்கப்படல் வேண்டும். அவர்களின் பாடப்புத்தகங்களும் குறிப்புக் கொப்பிகளும் புத்தகப்பைகளும் தினமும் பார்வையிடப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளின் ஒழுக்கங்கள், கற்றல் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் கூர்ந்து அவதானிக்கப்படுகின்ற போது வீடு முன்னேறும்; இவ்வாறு வீடுகள் முன்னேற நாடு முன்னேறும். எனவே தேவையற்ற உள்ளீடுகள் நுழைய முடியாத வாறு கட்டுக்கோப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும். இளம் செடிகள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறத்தலாகாது. அவை மரமாகியதும் எமது பங்கு குறைந்து போகின்றது. ஆனால் அது வரையில் பெற்றார்கள் தான் பிள்ளைகளின் நடவடிக்கைகள் பற்றி பரிசீலித்துப் பார்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். ஒருமுறை என் மகனுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டாம் என்று நான் தடை விதித்த ஒருவர் இன்று பாரிய நெருக்கடியில் அகப்பட்டுள்ளார். வளரும் பயிரை அன்று முளையிலேயே கண்டுகொண்டேன்.
அவசர பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காக கஞ்சா கடத்தல், கள்ளமண் ஏற்றிவிற்றல், அங்கீகாரமற்ற களவுத் தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் எமது இளைஞர்கள் ஈடுபடுகின்றார்கள். இவற்றைப் பெற்றாராகிய நாமே தடுக்க முற்பட வேண்டும். பிள்ளைகளுக்கு நாமே களவை கெட்ட பழக்க வழக்கங்களை வலிந்து பழக்குபவர்களாக அமையக்கூடாது.
அடுத்து முத்தமிழ் விழா பற்றிய ஓர் இரு விடயங்களை ஆராய்வோம்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் கலை வடிவங்கள், தமிழர்களின் தொன்மை, அவர்களின் கலாச்சார விழுமியங்கள், தமிழர்களின் இலக்கியப் படைப்புக்கள், அவற்றின் உரை நடைகள், உயர்ந்த இலக்கியச் சுவைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறத்தக்கது முத்தமிழ் விழா. இந்த முத்தமிழ் விழாவில் மாணவர்கள் தமது மொழியாற்றலையும், எண்ணக்கருவூலங்களையும், சிந்தனைச் சிதறல்களையும் வெளிப்படுத்துவதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் ஏதுவாக கடுகு என்ற பெயரைத்தாங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
கவிதை, கட்டுரை, சிறுகதை, இலக்கியம், சமயம் போன்ற பல விடயங்களைத் தாங்கி வருகின்ற இந்த நூல் தொகுப்பானது எமது மாணவ மாணவியரின் எழுத்தாக்கத்திற்கு உந்துதலாக அமையும். இவ்வாறான நூல் வெளியீடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேலும் மேலும் மேற்கொள்ளப்படவேண்டும். எமது பதிப்புக்களில் எழுத்துப்பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும். எழுத்துப்பிழைகள் அற்ற ஒரு வெளியீடாக எமது பதிப்புக்களை வெளிக்கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நான் றோயல் கல்லூரி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த போது ஏதாவது ஒரு எழுத்துப்பிழை, நிறுத்தற் குறியீடுகள் தவறு ஆகியவற்றை எமது சஞ்சிகையில் கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று என் நண்பர்களிடம் சவால் விட்டதுண்டு. அந்த அளவுக்கு நாங்கள் பதிப்புக்களைப் பரிசீலித்து வெளியிட்டோம்.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் உங்கள் கிராமம். பச்சைப் பசேல் என்ற நெற் பயிர்கள் நெல் மணிகளைத் தாங்குவதற்கு ஏற்ற அடித்தளத்தை உறுதியாக அமைத்துக் கொண்டு இக் கால கட்டத்தில் ஓங்கி வளர்ந்து வருகின்றன. அழகிய மருதமரங்கள் இது மருதநிலம் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இரவில் நிழல்ப்பரப்பில், வெண்மணல்திட்டில், சுதந்திரக்காற்றை சுயமாக சுவாசித்து, பாய்த்தடுக்கில் மல்லாந்து படுத்து, வானத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களைக் கண்டு ரசிக்கின்ற அந்த அற்புதமான இயற்கை உணர்வை நீங்கள் இங்கு இரசிக்கக் கூடியதாய் இருக்கும் என்று நம்புகின்றேன். இவ்வாறான இயற்கை ரசனைகளைக் கொண்ட கிராமங்களில் வாழ்கின்ற மக்களும் ரசனை மிக்கவர்களாக ஏனையோரை மதிப்பவர்களாக இயற்கையோடு பின்னிப்பிணைந்தவர்களாகக் காணப்படுவர். அதனால் தானோ என்னவோ கிராமங்கள் சமுதாயப் பழக்கவழக்கங்களில் பண்பட்டு நிற்கின்றன. அன்றாட வேலைகளுடன் சேர்த்து கற்றலுக்கு சிறிது நேரம், சமுதாயப் பணிகளுக்கு சிறிது நேரம், வருங்கால சந்ததியின் ஊக்குவிப்புக்கான வேலைத்திட்டங்களுக்கு சிறிது நேரம், கலை கலாச்சார இலக்கிய நிகழ்வுகளுக்கு சிறிது நேரம் என்று தமது நேரங்களை ஒதுக்கிக் கொண்டு எளிமையான ஆடம்பரமற்ற சுக வாழ்வைக் கொண்டிருப்பது நகரத்தவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தக் கூடியது.
நகரத்தில் மக்கள் தேக ஆரோக்கியத்திற்காக வலிந்து வீதிவழியே நடைபயிற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கிராமங்களில் வாழ்கின்றவர்களோ தமது தொழில் முயற்சியின் போதே உடலுக்குத் தேவையான அளவு பயிற்சியையும் பெற்றுக் கொள்கின்றார்கள். அதனால் தான் கிராமத்தவர்களுக்கு டிலியளள ழிநசயவழைn தேவைப்படுவதில்லை. நீரிழிவு நோய் ஏற்படுவதில்லை. அந்த வகையில் கிராமியம் சிறப்பானது. வடமராட்சி கடற்கரை வெண்மணல்ப்பரப்புக்களுடன் கூடிய பிரதேசங்கள். அவை வல்லிபுரக் கோவிலில் தொடங்கி கட்டைக்காடு முள்ளியான் வரை மணல் திட்டுக்களுடன் ஒரு வித்தியாசமான சூழலை பிரதிபலிக்கின்றன.
எனவே இன்றைய மாலைப் பொழுதில் உங்கள் இனிய உபசரிப்பின் கீழ் உங்களோடு வீற்றிருந்து உங்கள் கலை நயங்களை கண்டு ரசித்து இன்புற்றிருக்க எனக்குத் தந்த சந்தர்ப்பம் எனது மனத்திற்கு இதத்தை தருகின்றது. இங்குள்ள மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்து எமது சமூகத்தை முன்னேற்ற இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். எனது அன்பும் ஆதரவும் உங்களுக்கு எச் சந்தர்ப்பத்திலும் கிட்டுவன என்று கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றேன். அருட்தந்தை டேவிட் நிரு~pகன் அவர்களுக்கு என்னை அழைத்தமைக்காக நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com